பெங்களூரு : 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு வரும் மே மாதம் 10 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு கர்நாடக தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. ஆட்சியை தக்கவைக்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன.
ஏறத்தாழ 3 ஆயிரம் பேர் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் களத்தில் உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. ஒருபுறம் வேட்பாளர் தங்கள் அனல் பறக்கும் பிரசாரத்தை துவக்கி உள்ளனர். இந்நிலையில் குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
தங்கள் வேட்பாளர்கள் மீது உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை செய்தித்தாள், இணையதளங்கள், மற்றும் தொலைக்காட்சிகளில் கட்சிகள் வெளியிட்டு உள்ளன. வேட்பாளர்களின் பின்னணி குறித்து வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு வழங்கும் விதமாக வேட்புமனு வாபஸ் பெறும் தேதிக்கு 4 நாட்களுக்கு முன்னதாக, வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
அதன் படி முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மீது 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கரோனா கட்டுப்பாடுகளை மீறியது, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியது, லஞ்சப் புகார் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சித்தராமையா மீது 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
அதேபோல் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி மீது நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்னாள் கர்நாடக எரிசக்தி துறை அமைச்சர் டி.கே. சிவகுமார் மீது 19 வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது, லஞ்சப் புகார், பொது சொத்துகளை மீறியது, கரோனா கட்டுப்பாடுகளை மீறியது, வரி ஏய்ப்பு, பண மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் காங்கிரஸ் வேட்பாளர் வினய் குல்கர்னி மீது 8 வழக்குகளும், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி பாஜக வேட்பாளர் முனிரத்னா மீது 8 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அதேபோல் சமராஜ்பேட் காங்கிரஸ் வேட்பாளர் ஜாமீர் அகமது கான் மீது 5 வழக்குகளும், சாந்தி நகர் வேட்பாளர் ஹரீஸ் மீது 3 வழக்குகளும் ஷிகாரிபுரா பாஜக வேட்பாளர் பி ஒய் விஜயேந்திரா மீது 2 வழக்குகளும் உள்ளன.
இதையும் படிங்க : நோ கமெண்ட்ஸ்.! சிம்ப்ளி வேஸ்ட்..! - காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் கேள்விக்கு இந்திய பிரதிநிதி பதில்!