டெல்லி: மத்திய வரவு செலவுத் திட்ட அறிக்கையை நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்தபோது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, வேளாண் துறைக்கென பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், ஆயிரம் லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்வதன் மூலம் ஒரு கோடி உழவர்கள் பயனடைவர். இதன் வாயிலாக அவர்கள் 2.37 லட்சம் கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையாகப் பெறுவார்கள் என்றார்.
வேளாண் துறைக்காக வரவு செலவுத் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:
- 2021-22 குறுவை சாகுபடியில் கோதுமை கொள்முதல் மற்றும் 2021-22 காரீஃப் நெல் கொள்முதல் மூலம் 163 லட்சம் உழவர்களிடமிருந்து ஆயிரத்து 208 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, நெல் கிடைக்கும். இதன்மூலம் 2.37 லட்சம் கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் அவர்களின் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும்.
- ரசாயனமற்ற இயற்கை வேளாண்மை நாடு முழுவதும் ஊக்குவிக்கப்படும். முதல்கட்டமாக கங்கை ஆற்றங்கரையோரம் 5 கி.மீ. சுற்றளவில் வேளாண் நிலங்களில் கவனம் செலுத்தப்படும்.
- 2023ஆம் ஆண்டு பன்னாட்டு சிறு தானிய வளர்ச்சி ஆண்டாக அறிவிக்கப்படும். அறுவடைக்குப் பிந்தைய மதிப்புக் கூட்டல், உள்நாட்டு நுகர்வு அதிகரிப்பு, தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சிறு தானிய உற்பத்திகளை வர்த்தகம் செய்வதற்கு ஆதரவு வழங்கப்படும்.
- எண்ணெய் வித்துக்காக இறக்குமதியைச் சார்ந்திருப்பது குறைக்கப்படும், உள் நாட்டிலேயே எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்க விரிவான திட்டம் செயல்படுத்தப்படும்.
- தனியார் வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்கள், வேளாண் பங்குதாரர்களுடன் பொதுத் துறை ஆராய்ச்சி - விரிவாக்க நிறுவனங்களின் ஈடுபாட்டுடன் உழவர்களுக்கு டிஜிட்டல், ஹை-டெக் சேவைகளை வழங்குவதற்காக ஒரு திட்டம் தொடங்கப்படும்.
- பயிர் மதிப்பீடு, நிலப் பதிவேடுகளை டிஜிட்டல்மயமாக்குதல், பூச்சிக்கொல்லிகள் தெளித்தல், ஊட்டச்சத்துகள் ஆகியவற்றிற்காக ‘கிசான் ட்ரோன்’ பயன்பாடு ஊக்குவிக்கப்படும்.
- இயற்கை, ஜீரோ-பட்ஜெட், இயற்கை வேளாண்மை, நவீன வேளாண்மை, மதிப்பு கூட்டல், மேலாண்மை ஆகியவற்றின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேளாண் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களைத் திருத்துவதற்கு மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும்.
- பண்ணை அளவில் வாடகை அடிப்படையில் உழவர்களுக்கான இயந்திரங்கள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆதரவு உள்ளிட்டவற்றிற்கு நிதி ஒதுக்கப்படும். கென்-பெட்வா திட்டம், பிற ஆறுகளை இணைக்கும் திட்டங்கள்.
- 44 ஆயிரத்து 605 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கென்-பெட்வா இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் நோக்கம் 9.08 லட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் பாசன பலன்களைப் பெற வேண்டும், 62 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்பதே.
- வேளாண் துறையைப் பொறுத்தவரை, கங்கை ஆற்றங்கரையோர இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதையும் படிங்க: ஜனவரியில் ஜிஎஸ்டி உச்சம்; ரூ.1.40 லட்சம் கோடி வருவாய் - நிர்மலா சீதாராமன் பெருமிதம்