புதுச்சேரி: முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளுடன் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்துரையாடல் நடத்தினார். அப்போது, விவசாயமும், விவசாயிகளும்தான் நம் நாட்டின் எதிர்காலம், கேள்வி கேட்கும் தன்மையை இளைய சமூகத்தினர் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் எல்லா துறைகளிலும் ஈடுபடவேண்டும் என கூறிய அவர், இந்த சமூகத்திலுள்ள சில சக்திகள் உங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் எனவும், அதைத்தாண்டி பெண்கள் வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், அந்நிகழ்வில் மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். ராஜிவ் காந்தி மரணம் தொடர்பாக மாணவி ஒருவர் கேள்வி கேட்டபோது, எனது அப்பா மறையவில்லை எனவும், அவர் என்னுடனே இருக்கிறார் எனவும் ராகுல் காந்தி உருக்கமாக பதிலளித்தார்.
இந்நிகழ்வின்போது, ராகுல் காந்தியுடன் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி. சுப்ரமணியம், மேலிட தலைவர்கள் குண்டுராவ், சஞ்சய் தத் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் காங். அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மனு!