ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாஸா மாவட்டத்தை அடுத்த சார்ஜன்புரு வனத்தை ஒட்டிய பகுதியில் நக்சலைட் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, கடந்த இரு நாட்களாக சி.ஆர்.பி.எப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடந்த புதன்கிழமை (ஜன.11) கண்காணிப்பு பணியின்போது ஐஇடி வெடிகுண்டு வெடித்ததில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து படுகாயம் அடைந்த 5 சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கும் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ராஞ்சி அழைத்துச்செல்லப்பட்டனர். தொடர்ந்து வீரர்கள் படுகாயம் அடைந்த பகுதியில் கூடுதல் வீரர்கள் களமிறக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரமாக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றும் (ஜன.12) தொடர் தேடுதல் பணி நடந்து கொண்டு இருந்த நிலையில், அடுத்து ஒரு ஐஇடி வெடிகுண்டு வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு வெடித்ததில் 3 வீரர்கள் படுகாயம் அடைந்ததாகவும், முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் ராஞ்சி ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயம் அடைந்த 3 வீரர்களில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் சம்பவ இடத்தில் மேற்கொண்டு வீரர்கள் களமிறக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணி நடைபெற்று வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: IND VS SL 2nd ODI : தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி!