டெல்லி: கரோனா பரவல் காரணமாக சவுதி அரேபியா அரசு, ஹஜ் பயணங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையிலும், வெளிநாட்டு பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து வந்தன.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, கரோனா காலங்களில் ஹஜ் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக சவுதி அரேபியா அரசு அறிவித்தது. வெளிநாடுகளில் இருந்து வயது வரம்பின்றி, எத்தனை பேர் வேண்டுமானாலும் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஹஜ் புனித பயணத்தில் முக்கியப் பிரமுகர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
இதுதொடர்பாக நேற்று(ஜன.11) தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ஸ்மிருதி இரானி, "ஹஜ் புனித பயணத்தில் முக்கியப் பிரமுகர்களுக்கான இட ஒதுக்கீடு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஹஜ் கமிட்டி மற்றும் உயர்மட்ட அரசியலமைப்பு பதவிகளில் உள்ளவர்களுக்கு ஹஜ் பயணத்தில் சிறப்பு இடம் வழங்கப்பட்டது.
தற்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்த இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் உள்ள ஹஜ் கமிட்டிகளும் ஆதரவளித்துள்ளன. இதனால் ஹஜ் பயணத்தில் விஐபி கலாச்சாரம் முடிவுக்கு வந்துள்ளது. பிரதமரின் வழிகாட்டுதல்படி, விஜபி கலாச்சாரம் இல்லாத முழுமையான ஹஜ் கொள்கை எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: ஒடிசாவில் கோலாகலமாக தொடங்கிய உலகக்கோப்பை ஹாக்கி திருவிழா!