பெங்களூரு: பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அக்டோபர் 29ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
46 வயதிலும் கூட தினமும் உடற்பயிற்சி செய்யவரான புனித் ராஜ்குமாரின் திடீர் மரணமானது அம்மாநில மக்களின் மனதில் ஆரோக்கியம் குறித்த அச்ச உணர்வை எழுப்பியுள்ளது.
பரிசோதனைக்காக குவியும் மக்கள்
இதன் வெளிப்பாடாக பெங்களூருவில் உள்ள ஜெயதேவா மருத்துவமனையில் இதயப் பரிசோதனை மேற்கொள்வதற்காக பொதுமக்கள் வரிசைக்கட்டி நின்ற சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
பொதுவாக, தினமும் அந்த மருத்துவமனைக்கு ஆயிரத்து 200 வெளி நோயாளிகள் வரும் நிலையில், நேற்றைய தினம் எண்ணிக்கை ஆயிரத்து 600 பேராக அதிகரித்துள்ளது. மேலும், புனித்தின் மரணத்திற்கு பிறகு பரிசோதனைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவமனை தரப்பு தெரிவிக்கிறது.
25% அதிகரிப்பு
இரண்டு நாள்களில் மட்டும் 25 விழுக்காடிற்கும் அதிகமானோர் பரிசோதனைக்கு வந்துள்ளதாகவும், உடற்பயிற்சி கூடங்கள் செல்வோரும் பரிசோதனைக்கு வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஜெயதேவா மருத்துவமனை இயக்குநரும், மருத்துவருமான மஞ்சுநாத் கூறுகையில், "மைசூருவில் உள்ள எங்கள் மருத்துவமனையிலும் வெளி நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. புனித் ராஜ்குமாரின் மரணத்திற்கு பிறகு ஆரோக்கியமான நபர்களும் கூட இசிஜி போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவமனைக்கு வருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: 'அப்பு எழுந்து வா, மீண்டு வா' - கண்ணீர் கடலில் ரசிகர்கள்!