ஷிபோர் : இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் இனம் அழிந்து 70 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், மீண்டும் அந்த இனத்தைக் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டது. கடந்த ஆண்டு நமீபியாவில் இருந்து மூன்று ஆண் மற்றும் 5 பெண் என மொத்தம் 8 சிவிங்கிப் புலிகள் மத்தியப் பிரதேச மாநிலம் குணோ - பால்பூர் தேசிய பூங்காவிற்குக் கொண்டு வரப்பட்டன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் சிவிங்கி புலிகளை வனப் பகுதிக்குள் பிரதமர் மோடி விடுவித்தார். இந்த சிவிங்கிப் புலிகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதனிடையே கடந்த ஜனவரி மாதம் சாஷா என்ற பெண் சிவிங்கிப் புலிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
மருத்துவப் பரிசோதனை செய்ததில், அந்த பெண் சிவிங்கிப் புலிக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பது தெரியவந்தது. அந்தப் புலிக்கு தொடர்ந்து மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த மாதம் 27ஆம் தேதி சிகிச்சை பலனின்றி சாஷா உயிரிழந்தது. இதையடுத்து குனோ பூங்காவில் உள்ள மற்ற சிவிங்கிப் புலிகளுக்கு மருத்துவர்கள் சோதனைகளை மேற்கொண்டு ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதில் ஓவென், ஆஷா என்ற இரு சிவிங்கிப் புலிகள் பரந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டன. ஓவென் சிவிங்கிப் புலி வழித் தவறி அருகில் இருந்த கிராமத்திற்குள் நுழைந்தது. குனோ தேசிய பூங்காவில் இருந்து ஏறத்தாழ 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விஜய்பூர் என்ற பகுதிக்கு அடுத்த ஜர் பரோடா கிராமத்திற்குள் ஓவென் சிவிங்ப் புலி நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கிராமத்திற்குள் சிவிங்கிப் புலி நுழைந்ததை அடுத்து கிராம மக்கள் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் ஓவெனை மீண்டும் வனத்திற்குள் விரட்டும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஓவெனை தொடர்ந்து, மற்றொரு சிவிங்கிப் புலியான ஆஷாவும் வனத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக வனத்தை ஒட்டிய ஆற்றுப் படுகை பகுதியில் ஆஷா காணப்பட்ட நிலையில் தற்போது காணவில்லை என வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
அண்மையின் கிராமத்திற்குள் புகுந்த ஓவென் சிவிங்கிப் புலி மாடு மற்றும் மான் ஆகிய விலங்குகளை கொன்ற நிலையில், அதை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் திட்டத்தில் உள்ளதாக வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர். அதேநேரம் ஆஷா சிவிங்கிப் புலியை பிடிக்கும் முயற்சியிலும் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க : பழங்குடியின இளைஞர் மது கொலை வழக்கு - 13 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை - சிறப்பு நீதிமன்றம் அதிரடி!