ஆக்ரா: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள "தாஜ்மஹால்" உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இதனை இந்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் தாஜ்மஹாலைப் பார்வையிடுகிறார்கள்.
இந்த நிலையில், தாஜ்மஹாலுக்கு 1.47 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்தும்படி ஆக்ரா மாநகராட்சி நிர்வாகம், இந்திய தொல்லியல் துறைக்கு அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது. குறிப்பிட்ட காலத்திற்குள் நிலுவை வரியை செலுத்தாவிட்டால் தாஜ்மஹாலுக்கு சீல் வைக்கப்படும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து தற்போது மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தாஜ்மஹாலின் குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மைக்காக 1.96 கோடி ரூபாய் செலுத்தும்படி, இந்திய தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தாஜ்மஹால் உள்பட நாட்டில் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்களுக்கும் குடிநீர் வரி, சொத்து வரி உள்ளிட்டவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தாஜ்மஹாலுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது தொல்லியல் துறை அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து ஆக்ரா தொல்பொருள் ஆய்வாளர் ராஜ்குமார் படேல் கூறும்போது, "தாஜ்மஹால் உட்பட அனைத்து நினைவுச் சின்னங்களையும் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. விதிகளின்படி நினைவுச் சின்னங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: டெல்லியில் கடும் பனிமூட்டம் : ரயில்கள் தாமதம்