பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றிய ஆம்ஆத்மி, தற்போது ஹிமாச்சல பிரதேசத்தில் தேர்தல் பணிளை தொடங்கியுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டியிடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில், ஆம்ஆத்மி சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
இதில், ஆம்ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், ஆம்ஆத்மி தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
பேரணியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், தானும், பகவந்த் மானும் சாதாரண குடிமகன்கள் என்றும், அதனால் தங்களுக்கு அரசியல் செய்யத் தெரியாது என்றும் கூறினார். தேசபக்தியே தங்களது கொள்கை என்றும், ஹிமாச்சலத்தை ஊழலற்ற மாநிலமாக மாற்றுவதே தங்களது நோக்கம் என்றும் கூறினார்.
ஊழலற்ற ஆட்சியை டெல்லியிலும், பின்னர் பஞ்சாபிலும் சாத்தியமாக்கினோம், அடுத்தது ஹிமாச்சலம்தான் என்றார். காங்கிரசும், பாஜவும் பல ஆண்டுகள் ஆட்சி செய்தும் மாநிலத்தில் எந்தவித வளர்ச்சியும் முன்னேற்றமும் இல்லை.
அதேநேரம் அவர்கள் ஊழலை மட்டுமே வளர்த்தார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார். ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், ஹிமாச்சல பிரதேசம் ஊழலற்ற மாநிலமாக மாறும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார்.
இதையும் படிங்க : குஜராத்தில் (மீ)ண்டும் ரத யாத்திரை அரசியல்.. மும்மூர்த்திகள் அரசியல் கணக்கு!