சூரத்: பிரதமர் மோடி குறித்த அவதூறு கருத்து வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய ராகுல் காந்தி, சூரத்தில் உள்ள சாலையோர உணவகங்களுக்கு சென்று பதார்த்தங்களை சுவைத்து பார்க்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில், ராகுல் காந்தி கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவருக்கும் எப்படி ஒரே பெயராக இருக்க முடியும்?
எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற இணை பெயரோடு இருக்க முடியும்?” எனப் பேசினார். இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, மோடி குடும்பத்தாரின் சமூக மரியாதை மற்றும் பெயருக்கு களங்கம் விளைவித்ததாக வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என சூரத் நீதிமன்றம் அறிவித்தது. அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், தண்டனை விதிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே ராகுல் காந்தி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு நீதிமன்றம் அவகாசம் வழங்கியது. இந்நிலையில், நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த ராகுல் காந்தி, அருகில் இருந்த உணவகத்திற்குச் சென்றார். காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுடன் ஒன்றாக அமர்ந்து குஜராத்தி உணவுகளை அவர் சுவைத்து மகிழ்ந்தார்.
நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் சாதாரண நிலைக்கு திரும்பிய ராகுல் காந்தியின் நடவடிக்கை கண்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். உள்ளூர் உணவகத்தில் அமர்ந்து குஜராத்தி வகையிலன துவரம் பருப்பு, காய்கறி சேர்த்து சமைக்கப்பட்ட தால், பக்ரி, சீரகம், மற்றும் நெய் சேர்த்து செய்யப்பட்ட ரொட்டி உள்ளிட்ட உணவுகளை கேட்டு வாங்கி ராகுல் காந்தி சாப்பிட்டார்.
உணவுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், உணவக ஊழியர்களுடன் கைகுலுக்கி, புகைப்படம் எடுத்துக் கொண்டார். ராகுல் காந்தி உணவருந்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து உணவக உரிமையாளர் சஞ்சய் கஜேரா கூறுகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கடையில் உணவு சாப்பிட வருகிறார் என்பது முன்கூட்டியே தெரியாது. வேறு இடத்தில் சாப்பிடப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டோம், ஆனால் அவர்கள் இங்கே வருவார்கள் என துளியும் எதிர்பார்க்கவில்லை. என்றார்.
இதையும் படிங்க : 2 ஆண்டு சிறை.. எம்.பி. பதவிக்கு ஆபத்தா?