கோட்டயம்: கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தனியார் பண்ணையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிப்பு ஏற்பட்ட பண்ணையில் உள்ள பன்றிகளை கொன்று புதைக்க கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளுக்கு கோட்டயம் மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இதுவரை 48 பன்றிகள் கொன்று புதைக்கப்பட்டுள்ளன.
பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பண்ணையை சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவானது பாதிக்கப்பட்ட பகுதியாகவும், பத்து கிலோமீட்டர் சுற்றளவு நோய் கண்காணிப்பு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பாதிக்கப்பட்ட பகுதியில் பன்றி இறைச்சி விற்கும் கடைகளை மூடுவது, பன்றி இறைச்சி மற்றும் தீவனங்களை அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வதை தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் உள்ள சில பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியது.
இதையும் படிங்க: ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்: கேரளாவில் பன்றிகளை கொல்லும் பணி தொடக்கம்