டெல்லி : இந்தியா முதல் முறையாக காணொலி வாயிலாக நடத்திய மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் 5 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த மாநாடு குறித்து பேசிய இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் (மேற்கு) ரீனட் சந்து (Reenat Sandhu), “இன்று நடைபெற்ற இந்தியா-மத்திய ஆசிய உச்சி மாநாட்டின் முதல் கூட்டம், சமீபத்திய ஆண்டுகளில் மத்திய ஆசிய நாடுகளுடனான நமது நீடித்த ராஜதந்திர ஈடுபாட்டின் உச்சகட்டமாகும்.
இன்றைய உச்சிமாநாடு அனைத்துத் தலைவர்களின் தொடக்கக் கருத்துகளையும் உள்ளடங்கியது. இது இந்தியா-மத்திய ஆசியாவின் உறவை 'புதிய உயரத்திற்கு' கொண்டு செல்கிறது” என்றார்.
மேலும், “மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தானில் நிலையான பாதுகாப்பான அமைதியான ஆட்சி அமைய முழுமையான ஆதரவை நல்குவதாக தெரிவித்தனர்” என்றும் கூறினார்.
தொடர்ந்து, “இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே கூட்டு-பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகள் நடைபெறும். பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டுப் பயிற்சியில் அதிக புரிதலை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மத்திய ஆசிய நாடுகளில் இருந்து 100 பேர் கொண்ட இளைஞர் குழுவை இந்தியா வழிநடத்தும்” என்றும் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால், கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ், கிர்கிஸ்தான் அதிபர் சடிர் ஜாபரோவ், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான், துர்க்மெனிஸ்தான் அதிபர் குர்பாங்குலி பெர்டிமுஹமடோவ், உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சி ஆகியோர் இந்த மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்த, இந்தியா-மத்திய ஆசிய உச்சி மாநாடு முதல் முறையாக இன்று (ஜன.27) காணொலி வாயிலாக நடந்தது. இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் இந்த ஆண்டு 5 மத்திய ஆசிய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளின் 30ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதால், இந்த மாநாடு சந்திப்பு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இதையும் படிங்க : Union Budget App: காகிதமில்லா நிதிநிலை அறிக்கை!