கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சினைகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே இரண்டு குழந்தைகள் உயிர் இழந்ததால், மாநில சுகாதாரத்துறை இந்த விவகாரத்தை கையில் எடுத்தது. அப்போது, 2 குழந்தைகளும் அடினோவைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனால் அடினோவைரஸ் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து, அதைக் கட்டுப்படுத்தும் பணியில் மாநில சுகாதாரத்துறை முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
இருப்பினும், மேற்கு வங்கத்தில் கடந்த 9 நாள்களில் 40 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதில் நான்கு குழந்தைகள் நேற்று (மார்ச் 5) கொல்கத்தாவில் உயிரிழந்தன. இவர்களும் அடினோவைரஸ் காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பின. இதன் காரணமாக மேற்கு வங்க மாநில மக்கள் மட்டுமல்லாமல் பிற மாநில மக்களும் பீதி அடைந்தனர். ஆனால், இந்த தகவலுக்கு மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை மறுப்பு தெரிவித்தது. இது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மார்ச் 2ஆம் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர், மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு அடினோவைரஸ் இறப்புகள் மட்டுமே பதிவாகி உள்ளன. மக்கள் பீதி அடைய தேவை இல்லை. மற்ற உயிரிழப்புகள் கொமொர்பிடிட்டி, நுரையீரல் ரத்தக்கசிவு, எடை இழப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்டுள்ளன. கொல்கத்தாவில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் 5,000 படுக்கைகளையும், 600 மருத்துவர்களையும் தயார் நிலையில் வைத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
இதனிடையே வடக்கு வங்க மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தரப்பில், மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் குழந்தைகளிடையே சுவாசக் கோளாறு தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகிறது. சிலருக்கு அடினோவைரஸ் அறிகுறிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், அடினோவைரஸ் அறிகுறிகளுடன் எந்த குழந்தையும் வடக்கு வங்க மாவட்டங்களில் அனுமதிக்கப்படவில்லை. 36 குழந்தைகள் சாதாரண சளி, காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகள் காரணமாக வடக்கு வங்க மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மாதிரிகளை சேகரித்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது.
அடினோவைரஸ் அறிகுறிகள் மற்றும் பரவல்: குளிர் காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்று வலி உள்ளிட்டவை அடினோவைரஸ் அறிகுறிகளாக உள்ளன. ஆகவே, மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனையை நாடுவது நல்லது. இந்த தொற்று நோய் என்பதால் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவக்கூடியது. அதாவது, தொடுதல், கைகுலுக்குதல் போன்ற தொடர்பு மூலமும், இருமல், தும்மல் காரணமாக காற்று மூலம் பரவக்கூடியது. அதேபோல அடினோவைரஸால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருள்களை மற்றவர்கள் தொட்ட பின்பு வாய், மூக்கு அல்லது கண்களைத் தொட்டால் பரவக்கூடும். அதேபோல மலம் வழியாகவும், சிறுநீர் வழியாகவும் பரவ வாய்ப்புள்ளது.
அடினோவைரஸ் பாதுகாப்பு: காய்ச்சல் இருக்கும் நபர்களுடன் இருந்து தள்ளி இருக்கவும். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவவும். வெறும் கைகளால் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும். நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது. அதேபோல குழந்தைகளுக்கு டயபர் மாற்றும் போது கவனமாக இருக்க வேண்டும். கையுறைகளை பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: இந்தியாவில் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்.. தொண்டை வலி முக்கிய அறிகுறி.. குழந்தைகளை தாக்கும் அபாயம்..