டெல்லி: அதானி குழுமம் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி நிறுவனத்தின் ஹோல்சிம் பங்குகளை வாங்கியது. இதன் மொத்த மதிப்பு சுமார் 6.5 பில்லியன் டாலர்(1 பில்லியன் -100 கோடி). இது கௌதம் அதானியின் மிகப்பெரிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இந்த கையகப்படுத்துதல் மூலம், அதானி குழுமம் நாட்டின் இரண்டாவது பெரிய சிமென்ட் உற்பத்தியாளராக மாறியுள்ளது.
இந்த நிலையில், அதானி குழுமம், தங்களது சிமென்ட் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கி, நாட்டிலேயே அதிக லாபம் ஈட்டும் உற்பத்தியாளராக மாறத் திட்டமிட்டுள்ளதாக கெளதம் அதானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகளவில் சிமென்ட் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக இருந்தாலும், சீனாவுடன் ஒப்பிடும்போது அதன் தனிநபர் நுகர்வு மிகவும் குறைவு.
சீனாவின் தனிநபர் நுகர்வு 1,600 கிலோ, இந்தியாவில் 250 கிலோ மட்டுமே. சிமெண்ட் தேவையின் நீண்ட கால சராசரி வளர்ச்சி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 முதல் 1.5 மடங்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இரண்டு மடங்காக அதிகரிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
தற்போதைய உற்பத்தித்திறன் 70 மில்லியன் டன்னாக இருக்கும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் 140 மில்லியன் டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம். இது நாட்டின் வளர்ச்சியிலும் மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
2050ஆம் ஆண்டில் இந்தியா 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும். எங்களது குழுமத்தின் பொருளாதாரம் முன்பை விட வலுவாக உள்ளது. எங்களது வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்துவதற்காக சர்வதேச சந்தைகள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகிறோம். அதானி குழுமத்தின் சந்தை மூலதனம், 260 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த நிறுவனத்தையும் விட நாங்கள் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: உலகின் 2வது பெரிய பணக்காரர் ஆனார் அதானி