டெல்லி: இந்தி திரையுலகில் முன்னணி நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ. 200 கோடி பண மோசடி செய்த சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பில் இருந்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையில் கடந்த நவ.20 அன்று சந்திரசேகரின் உதவியாளர் பிங்கி இரானியை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்குத் தொடர்பாக சுகேஷ் சந்திரசேகரின் மனைவி லீனா மரியா பவுலோஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (டிச.12)காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனையடுத்து அடுத்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து உத்தரவு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வழக்கின் மீதான அடுத்த விசாரணை குறித்தான பட்டியல் இடுவதற்கு ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு காவல் துறைக்கு நீதிபதி தினேஷ் குமார் சர்மா உத்தரவிட்டார். பொருளதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த ஆண்டு சுகேஷ் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து ஐபிசி பிரிவுகள் கீழும் மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்ட (எம்சிஓசிஏ) விதிகளின் கீழும் சந்திரசேகர், பவுலோஸ் மற்றும் பலர் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ரான்பாக்ஸியின் முன்னாள் விளம்பரதாரர்களான ஷிவிந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங் ஆகியோரின் மனைவிகளிடம் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார். மத்திய சட்ட அமைச்சக அதிகாரி போல் காட்டி, அவர்களது கணவர்களுக்கு ஜாமீன் தருவதாக கூறி, அவர்களது மனைவிகளான அதிதி சிங் மற்றும் ஜப்னா சிங் ஆகியோரை பல கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி செய்துள்ளார்.
இதையும் படிங்க: 'புஷ்பா' டயலாக் சர்ச்சை.. மன்னிப்பு கோரிய மனோஜ் திவாரி!