ஹைதராபாத்: தெலங்கானா அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஜனவரி 22, பிப்ரவரி 26ம் தேதிகளில் பல்வேறு அரசுப்பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் உதவி செயற்பொறியாளர் (AEE), மண்டல கணக்கு அதிகாரி (DAO) ஆகிய பணிகளுக்கான வினாத்தாள் கசிந்ததாக கடந்த மார்ச் மாதம் குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விவகாரம் தெலங்கானா மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், விசாரணை நடத்த காவல்துறை சார்பில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெலங்கானா மாநில மின்விநியோக நிறுவனத்தில் மண்டல பொறியாளராக பணியாற்றி வரும் பூலா ரமேஷ், 2 தேர்வுகளுக்கான வினாத்தாளை விற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தேர்வு எழுதிய 7 பேருக்கு, Chat GPT மூலம் விடையை கண்டுபிடித்து தெரிவித்துள்ளார். இதற்காக தேர்வறையில் இருந்த 7 பேரும், புளூ டூத் பட்ஸ்களை பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.
இதன் அடிப்படையில், தேர்வு எழுதிய பிரசாந்த், நரேஷ், மகேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகியோரை நேற்று (மே 29) போலீசார் கைது செய்தனர். தேர்வு எழுதியவர்கள் மின்னணு கருவிகளுடன் தேர்வறைக்குள் எப்படி அனுமதிக்கப்பட்டனர் என்பது குறித்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, தேர்வு கண்காணிப்பாளர் வினாத்தாளை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து, அதை ரமேஷூக்கு அனுப்பியிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கில் இதுவரை 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மார்ச் 5ம் தேதி மற்றொரு தேர்வு நடைபெற்ற நிலையில், உதவி பொறியாளர் பூலா ரவி கிஷோரிடம் இருந்து வினாத்தாள்களை பெற்ற ரமேஷ், அதை 25 பேருக்கு விற்றுள்ளார். ஒரு வினாத்தாளுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டள்ளது. இந்த விவகாரத்தில் மகபூபா நகர் மாவட்டத்தில் மட்டும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹைதராபாத், ரங்காரெட்டி, கம்மம் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவால், ஏராளமான இளைஞர்கள் வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆளும் பிஆர்எஸ் அரசு மீது காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தெலங்கானா அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ஜனார்த்தன் ரெட்டி, செயலாளர் அனிதா, உறுப்பினர் லிங்கா ரெட்டி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பணப்பரிமாற்றம் நடந்துள்ளதால் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.