லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் முரத் நகர் பகுதியில் உள்ள தகன மேடையின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.
மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்துவைக்கப்பட்ட 15 தினங்களிலேயே புதிதாக கட்டப்பட்ட தகன மேடை இடிந்துவிழுந்த சம்பவத்திற்குப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தரமற்ற வகையில், மேடையைக் கட்டியதே விபத்திற்கு காரணம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையடுத்து, தகன மேடை கட்டுமான பணியுடன் தொடர்புடைய முரத் நகர் நகர பாலிகா நிர்வாக அலுவலர் நிஹாரிகா சிங், பொறியாளர் சந்திர பால், மேற்பார்வையாளர் ஆஷிஷ் ஆகிய மூன்று பொதுப்பணித் துறை அலுவலர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
மேலும் இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தகன மேடை கட்டுமான ஒப்பந்ததாரர் தியாகி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கப்படும் எனக் காவல் துறையினர் முன்னதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு அந்நபரைக் கைதுசெய்த காவல் துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: காசியாபாத் துயரம்: ரூ.55 கோடியில் கட்டப்பட்ட தகன மேடை இடிந்து விழுந்த விவகாரத்தில் மூவர் கைது!