டெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை மத்திய அரசு "அம்ரித் மகோத்சவ்" என்ற பெயரில் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக "ஹர் கர் திரங்கா பிரசாரம்" நடத்தப்படவுள்ளது.
அதன்படி வரும் 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை, நாடு முழுவதும் ஒரு வாரத்திற்கு 72 கோடி மூவர்ணக்கொடிகள் ஏற்றப்படும். இதற்கான ஏற்பாடுகளில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, டெல்லி சதர் பஜாரில் சுமார் 65ஆண்டுகளாக கொடிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பாரத் கைத்தறி நிறுவனம், ஹர் கர் திரங்கா பிரசாரத்திற்காக லட்சக்கணக்கில் கொடிகளை தயாரித்து வருகிறது.
இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் அப்துல் கஃபர்(72) கூறுகையில், "எங்களுக்கு மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், சண்டிகர், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் வந்துள்ளன.
தினமும் ஒன்றரை லட்சம் கொடிகளை தயாரித்து வருகிறோம். வரும் 13ஆம் தேதிக்கு முன்பு ஒரு கோடி எண்ணிக்கையில் தேசியக்கொடிகள் தயாரித்து டெலிவரி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். ’ஹர் கர் திரங்கா’ பிரசாரத்திற்காக சுமார் ஆயிரத்து 200 பேர் இந்த கொடிகள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆண்டு போல இதுவரை கொடிகள் தயாரிப்பு ஆர்டர்கள் வந்ததே இல்லை. இந்த ஹர் கர் திரங்கா பிரசாரம் பலருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளது. ஆண்கள் பெண்கள், இந்துக்கள், முஸ்லீம்கள் எனப்பல்வேறு தரப்பினரும் இரவு பகலாக இந்தப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று கூறினார்.
இதையும் படிங்க: ட்விட்டர் புரொபைல் - தேசிய கொடியை மாற்றினார் பிரதமர் மோடி