டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சிசோடியாவின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியதோடு, அவரிடமும் விசாரணை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக நேற்று(அக்.17) மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. அதன் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சிசோடியா, தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என்றும், சிபிஐ விசாரணையின் நோக்கம் என்ன என்பதை தற்போதுதான் புரிந்து கொண்டதாகவும் தெரிவித்தார். ஆம்ஆத்மியிலிருந்து விலகி, பாஜகவில் இணையும்படி சிபிஐ அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாகவும் பகிரங்கமான குற்றச்சாட்டை கூறினார். இந்த குற்றச்சாட்டை சிபிஐ திட்டவட்டமாக மறுத்தது.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆம்ஆத்மி முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய பாஜக பிரமுகருமான கபில் மிஸ்ரா, சிசோடியாவின் குற்றச்சாட்டுகள் வழக்கு விசாரணையை திசைதிருப்பும் முயற்சி என்றும், சிபிஐ அழுத்தம் கொடுத்தது உண்மை என்றால், சிசோடியா உண்மை கண்டறியும் சோதனையை செய்ய வேண்டும் என சவால் விடுத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஆம் ஆத்மியின் தலைமை செய்தி தொடர்பாளரும், எம்எல்ஏவுமான சவுரப் பரத்வாஜ், "பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. இப்போது சிசோடியாவை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று பாஜகவினர் கூறுகிறார்கள்.
ஆனால், பிரதமர் மோடிதான் மிகப்பெரிய பொய்யர் என்று நாம் நம்புகிறேன். அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய ஏஜென்சிகள் நடுநிலையாக செயல்படுவதாகவும், அவற்றிற்கும் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் மிகப்பெரிய பொய்யை பிரதமர் கூறுகிறார். இதற்காக பிரதமர் மோடியிடம் நார்கோ மற்றும் உண்மை கண்டறியும் சோதனையை எப்போது நடத்தப் போகிறார்கள்? என்பதை பாஜகவினர் கூற வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: என்னை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது - மணீஷ் சிசோடியா