டெல்லி: இந்தியாவில் ஆதார் அட்டை 2009ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அப்போது அதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால், ஆதார் அட்டை கடந்த சில ஆண்டுகளாக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
செல்போன் சிம் வாங்குவதிலிருந்து கல்வி மையங்களில் மாணவர் சேர்க்கை, வங்கிச் சேவை, விமான பயணம், மத்திய அரசின் எரிவாயு உருளைக்கான மானியம் என அனைத்து இடங்களிலும் ஆதாரின் அவசியம் அதிகரித்துள்ளது.
ஆகஸ்டில் உச்சம்
தற்போது, கரோனா தடுப்பூசி செலுத்துவதற்குக்கூட ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆதார் அட்டை பயன்பாடு மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 146 கோடி முறை ஆதார் அட்டையைப் பொதுமக்கள் அத்தாட்சியாகப் பயன்படுத்தியுள்ளனர். இது, கடந்த ஏப்ரல், மே மாதங்களை ஒப்பிடும்போது, ஆகஸ்ட் மாதத்தின் பயன்பாடு 50 விழுக்காடு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆதாரின் பயன்பாடு அதிகரித்திருப்பதற்கு, தடுப்பூசி அதிகமாகச் செலுத்தப்படுவதும் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நீதிமன்றத்தை மதிப்பதில்லை - மத்திய அரசைக் கண்டித்த உச்ச நீதிமன்றம்