பெலகாவி (கர்நாடகா): பெலகாவி மாவட்டம் கட்டபிரபா நகரில் ஒரு பெண்ணை செருப்பு மாலை அணிவித்து மனிதாபிமானமற்ற முறையில் ஒரு கும்பல் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த பெண் தனது வலையில் பலரை சிக்க வைத்து, மிரட்டி பணம் பறித்ததாக, ஊர்வலமாக இழுத்துச் சென்ற கும்பலைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முன்னதாக, அதிகாரி ஒருவரை இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் வலையில் விழ வைத்து தனக்கு வேண்டியதை செய்து கொண்டதாக உள்ளூர்வாசிகள் சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண், தங்களையும் மிரட்டுவதாகவும் அந்த உள்ளூர்வாசிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்தே, இந்த சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகிறது.
கும்பலால் தாக்குதலுக்குள்ளான அந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், "கடந்த மாதம் 30 ஆம் தேதி ஒரு அமைப்பைச் சேர்ந்த சில நபர்கள் என்னிடம் வந்து, ரூ.5 லட்சம் தருமாறு மிரட்டினர்.
தராவிட்டால் நாடு கடத்துவதாகவும் கூறி அச்சுறுத்தினர். நானே பிச்சை எடுத்து வாழ்கிறேன் என்று கூறி பணம் தர மறுத்துவிட்டேன். அதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (அக். 13) இரவு மீண்டும் சிலர் எங்கள் வீட்டிற்கு வந்து ரூ.5 லட்சம் தருமாறு மிரட்டி என்னைத் தாக்கினர். பின்னர், என்னை நிர்வாணமாக்கி செருப்பு மாலை அணிவித்து, அடித்து ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்" என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறுகையில், "நேற்று இரவு 8.30 மணியளவில் 36 பேர் எங்கள் வீட்டிற்கு வந்து, உணவருந்திக் கொண்டிருந்த என்னை தாக்கினர். பின்னர் ராடு மூலம் எனது மனைவியைத் தாக்கியவர்கள், அவரை நிர்வாணமாக்கி, பாலியல் பலாத்காரம் செய்தனர்.
மேலும், எங்களை நாடு கடத்துமாறு தங்கள் அமைப்பின் சார்பில் அதிகாரியிடம் முறையிட்டதாகவும் கூறி மிரட்டினர். அதைத் தொடர்ந்து, என் மனைவியை வீட்டில் இருந்து காவல் நிலையம் வரை, கழுத்தில் செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்" என்று கூறினார். இந்த சம்பவம் தற்போது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கருவில் உள்ள சிசுவை பாலியல் கணிப்பு! வீடு எடுத்து சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர் கைது! இருவர் தலைமறைவு! போலீசார் விசாரணை!