கர்நாடக மாநிலம் குப்பி நகரத்தில் அமைந்துள்ளது மாரனக்கர் ஏரி (Maaranakere lake). இந்த ஏரி 46 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆனால் அரசு நிர்வாகத்தின் ஆக்கிரமிப்புகளால், தற்போது முழு ஏரியும் காணாமல்போனது.
நீரால் நிரம்பி வளமையாக இருக்க வேண்டிய ஏரி, 1998ஆம் ஆண்டிலிருந்து அரசு கட்டடங்களால் நிரம்பத் தொடங்கியது. 1998 முதல் 2021ஆம் ஆண்டுவரை ஏரி இருந்த அதே இடத்தில் ஆண்டுக்கொரு முறை அரசு கட்டங்கள் கட்டப்பட்டுள்ளன.
1998இல் ஒக்கலிகர் சமுதாயம், வீரசைவ சமுதாயம், பொது கல்வித் துறை ஆகியவற்றிற்கு இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கீடுசெய்யப்பட்டது. அதே ஆண்டில் யாதவ சமுதாயத்திற்கும் அரை ஏக்கர் நிலம் ஒதுக்கீடுசெய்யப்பட்டது. அரசு முதல் நிலை கல்லூரி, பழங்குடி மாணவர்களுக்கு விடுதிகள் உள்பட பல கட்டடங்கள் அங்கு கட்டப்பட்டுள்ளன.
குப்பி நகரம் முழுவதிற்கும் மாரனக்கர் ஏரிதான் நீராதாரம். முன்பெல்லாம் மழை பெய்யும்போது ஏரி நிரம்பும். ஆனால் ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் இப்போதெல்லாம் ஊருக்குள் வெள்ளம் வரும் நிலை உள்ளது.
இதைத் தடுக்க ஏரியில் ஆக்கிரமிப்புகளை நீக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும்விதமாக சமூக ஆர்வலர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் நத்தத்தில் முறைகேடு: 'கிணத்த காணோம்' கதைபோல் உள்ளதாகப் புகார்