ஜபல்பூர்: கோடை காலத்தின் தொடக்கத்தில் அதிகளவிலான தண்ணீர், மோர், தர்பூசணி என இருக்கும்போது, கோடை காலத்தின் மத்தியில் மாம்பழம் மட்டுமே நாவின் நுனியில் நம்மை ஆள்கிறது. அப்படிப்பட்ட மாம்பழங்களில் எத்தனையோ வகைகள் நமது நாட்டில் உள்ளன. இருப்பினும், நமது தோட்டங்களில் குறிப்பிட்ட சில வகை மாம்பழங்களை மட்டுமே காண முடியும்.
ஆனால், மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் நகரின் ஹுனாஉதா கிராமத்தில் இருக்கும் விவசாயி சங்கல்ப் சிங் பரிஹாரின் தோட்டத்திற்குச் சென்றால் கிட்டத்தட்ட 24 வகையான மாம்பழங்களை காண முடியும். ஆம், இந்த 24 வகையான மாம்பழங்களில் 8 வகைகள் வெளிநாட்டு ரகத்தைச் சார்ந்தவை. அதிலும், மியாசகி(Miyazaki mango) என்னும் மாம்பழம் ஒரு கிலோ 2.7 லட்சம் ரூபாய் ஆகும்.
இது குறித்து விவசாயி சங்கல்ப் சிங் பரிஹார் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "சர்வதேச சந்தையில் ஒரு கிலோ மியாசாகி மாம்பழத்தின் விலை 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய். இதைத் தவிர தலாலா கிர் கேஷர் மாம்பழம் எனப்படும் ஜம்போ கிரீன் மாம்பழமும் இங்கு உள்ளது.
இது மட்டுமல்லாமல், ஜாப்பனிஸ் பிரிஞ்சால், தய்யோ நோ டமங்கோ எனப்படும் மியாசகி மற்றும் சூரியனின் முட்டை எனப்படும் மாம்பழமும் இருக்கிறது. மியாசகி மாம்பழம்(Miyazaki mango) ஜப்பானில் புகழ் பெற்றது. இவற்றில் கேஷர் ஆல்மாண்ட் மாம்பழத்தை நேபாளத்தில் இருந்தும், ஐவாரி மாம்பழத்தை சீனாவின் ஐவாரியிலும், டாமி மாம்பழத்தை ஃபுளோரிடாவிலும் இருந்து கொண்டு வந்தேன். யுஎஸ்ஏ ஆட்கின்ஸ் எனப்படும் பிளாக் மாம்பழமும் உண்டு. மொத்தத்தில் 8 சர்வதேச மாம்பழ வகைகள், 24க்கும் மேற்பட்ட இந்திய மாம்பழ வகைகளும் என்னுடைய தோட்டத்தில் உள்ளன” என கூறினார்.
கடந்த முறை இவரது தோட்டத்தில் இருந்த விலை உயர்ந்த மாம்பழ வகைகள் திருட்டு போயுள்ளது. எனவே, ஸ்ரீ மஹாகாளேஸ்வரர் ஹைபிரிட் ஃபார்ம் ஹவுஸ் எனப்படும் தனது தோட்டத்தின் மாம்பழங்களை பாதுகாக்க காவலுக்கு ஜெர்மன் செஃபர்டு நாய்களை காவலுக்கு வைத்துள்ளார். இது மட்டுமல்லாமல் சிசிடிவி கேமராக்களை ஆங்காங்கே பொருத்தியும், பாதுகாவலர்களை பணியமர்த்தியும் என 24 மணி நேர தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதேநேரம், விலை உயர்ந்த பல்வேறு வகையிலான மாம்பழங்களையும், மாந்தோப்பையும் ரசிக்கவும் ருசிக்கவும் வரும் பார்வையாளர்களுக்கு மாம்பழங்களைத் தொட அனுமதி கிடையாது என்பது சங்கல்ப்பின் வேண்டுகோளாக உள்ளது.
இது தொடர்பாக சங்கல்ப் சிங் பரிஹார் மேலும் கூறுகையில், “இங்கு இருக்கும் மாம்பழங்களை குழந்தைகள் அதிகமாக விரும்புகின்றனர். எனவே, குழந்தைகள் உடன் வரும் நபர்கள் ஜம்போ மாம்பழம், பிளாக் மாம்பழம் மற்றும் மியாசகி மாம்பழம் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக வருவார்கள். அவர்கள், மாம்பழங்களோடு நின்று செல்பி எடுத்துக் கொள்வார்கள். அவ்வாறு வரும் நபர்கள் மாம்பழங்களைத் தொட வேண்டாம் என நான் கூறுவேன். ஏனென்றால், விலை உயர்ந்த மாம்பழங்களை லேசாக தொட்டாலே உதிர்ந்து விடும் என்பதற்காகத்தான்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: உலகின் விலை உயர்ந்த மாம்பழம் திருட்டு: ஒரு கிலோ ரூ.2.7 லட்சம்!