புதுச்சேரி: கோரிமேடு பகுதியில் உள்ளது காவலர் பயிற்சிப் பள்ளி, இங்கு ஆள் சேர்ப்புப் பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்தவர் மகேஷ் (36). இவருக்கு மனைவி, நான்காம் வகுப்பு படிக்கும் ஸ்ரீ ஹரி என்ற மகன் உள்ளனர். இவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இதற்காகக் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றுள்ளார். இந்நிலையில், விரைவில் புதுச்சேரியில் காலியாக உள்ள காவலர்களுக்கான பணியிடங்களை ஆள்சேர்ப்பு மூலம் நிரப்பும் பணி நடைபெற உள்ளதால் இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன.
மாடியிலிருந்து குதித்து தற்கொலை
இதனால், காவலர் மகேஷ் சமீபகாலமாக மிகவும் மன உளைச்சலாக இருந்ததாகக் கூறப்படுகிறது, இந்நிலையில் இன்று காலை காவலர் பயிற்சிப் பள்ளிக்குப் பணிக்கு வந்த மகேஷ் இரண்டாவது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைக் கண்ட காவலர்கள் அவரது உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மகேஷ் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மலர் சந்தையில் வெடிகுண்டு - செயலிழக்கச் செய்த வெடிகுண்டு நிபுணர்கள்