மும்பை: மும்பை விஸ்தாரா விமானம் மும்பையில் இருந்து புறப்பட்ட நிலையில் அதில் ரித்தேஷ் சஞ்சய்குமார் ஜுனேஜா (வயது 23) என்பவர் பயணித்துள்ளார். இவர் விமானத்தில் அமர்ந்து கொண்டு விமான கடத்தல் பற்றி தொலைபேசியில் யாரிடமோ பேசியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த விமான பணியாளர்கள், உடனடியாக மும்பை போலீசில் ரித்தேஷ் சஞ்சய்குமார் மீது புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் ரித்தேஷ் சஞ்சய்குமார் ஜுனேஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினரின் விசாரணையில், ரித்தேஷ் விமானத்தில் அமர்ந்து விமான கடத்தல் குறித்து பேசியதாகவும், அது தொடர்பாக அவரிடம் கேட்ட போது தான் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறியதாகவும் தெரிய வந்துள்ளது.
எவ்வித ஆதாரமும் அற்ற காரணத்தால் மும்பையில் உள்ள சஹார் காவல்துறை, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 336 (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் குற்றங்கள் தொடர்பானது) மற்றும் 505 (2) (வதந்திகளைப் பரப்புதல் அல்லது ஆபத்தான செய்திகள் போன்ற குற்றங்களைக் கையாள்வது) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து ரித்தேஷ் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக இதுபோன்று ஜூன் 9 ஆம் தேதி, துபாய்க்கு விஸ்தாரா விமானத்தில் சென்ற பிலிபிட்டைச் சேர்ந்த அசீம் கான் என்பவர் விமானத்தில் வெடிகுண்டு குறித்து பேசியதாக பெண் சக பயணியின் புகாரின் அடிப்படையில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
அது குறித்து கூறுகையில், விஸ்தாரா விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் தனது சக பயணியான அசீம் கான் தொலைபேசி உரையாடலின் வெடிகுண்டு என யாரிடமோ கூறியதாகவும், அதனால் அவர் அச்சமடைந்து புகார் அளித்ததாகவும் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அசீம் கான் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் டெல்லி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
அந்த உரையாடலில் அவர் “மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் (CISF) எனது பையை சோதனை செய்தனர். அதில் நான் தேங்காய் வைத்திருப்பதை பார்த்த அவர்கள் வெடிகுண்டு என பயந்தனர். இதற்கு முன் நான் குட்கா எடுத்து வரும் போது அதைக் கண்டு கொள்ளாமல் அனுமதித்த அவர்கள், தேங்காயை வெடிகுண்டு என பயந்தது வேடிக்கையாக இருந்தது” எனக் கூறியுள்ளார். இதைக்கேட்ட சக பெண் பயணி வெடிகுண்டு என பயந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
மேலும், சந்தேகத்திற்குரிய வகையில் அசீமிடம் எதுவும் காணப்படாததால், அசீம் கானுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும், தேவைப்பட்டால் அவ்வப்போது விசாரணைக்கு வரவேண்டும் என கூறப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Delhi Ordinance row: டெல்லி அவசரச் சட்டம் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவா?- கார்கே பதில்