காரைக்கால்: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள நேரு நகரைச் சேர்ந்த ராஜேந்திரன்-மாலதி தம்பதியின் 2ஆவது மகன் பால மணிகண்டன்(13), அதே பகுயில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம்(செப். 2) பள்ளியில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பினார்.
அப்போது அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் பெற்றோர் மாணவனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து விஷம் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போது, பள்ளியின் வாட்ச்மேன் மாணவனுக்கு குளிர்பானம் கொடுத்தது சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. அதனடிப்படையில் வாட்ச்மேனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அந்த மாணவனின் வகுப்பில் படிக்கும் மாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியா என்பவர்தான் என்னிடம் குளிர்பானத்தை கொடுத்து பால மணிகண்டனுக்கு கொடுக்க சொன்னதாக தெரிவித்தார்.
இதையடுத்து விக்டோரியா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விக்டோரியாவின் மகளை விட பாலமணிகண்டன் நன்றாக மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் அவரது மகள் வருத்தத்துடன் காணப்பட்டுள்ளார்.
இதற்காக பாலமணிகண்டனை பழி வாங்கும் நோக்குடன் விக்டோரியா பூச்சி மருந்து கலந்த குளிர்பானத்தை பள்ளி காவலாளியிடம் கொடுத்து கொடுக்க சொல்லியுள்ளார். அப்போது தான் பாலமணிகண்டனின் உறவினர் என்று கூறியதால் காவலாளியும் நம்பி இந்த காரியத்தை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே பால மணிகண்டன் இன்று (செப்-4) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க:சென்னையில் காவல் நிலையத்திலிருந்து கைதி தப்பி ஓட்டம்