பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் செல்போன் டவர் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிர்போர் பகுதியில் உள்ள குடியிருப்பில் திடீரென நுழைந்த கும்பல், தங்கள் செல்போன் டவர் நிறுவனத்தின் ஊழியர் என அறிமுகப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் செல்போன் டவரை பழுது நீக்க வந்ததாக கூறியவர்கள், நான்கு மணி நேரத்தில் செல்போன் டவரை கழற்றிச் சென்றதாக அறியப்படுகிறது. இதுகுறித்து செல்போன் டவர் நிறுவனத்திற்கு வீட்டு உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த செல்போன் டவர் நிறுவன ஊழியர்கள் டவர் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவம் தொடர்பாக செல்போன் நிறுவனம் அளித்தப் புகாரில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2006ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனம் செல்போன் டவரை அமைத்ததாகவும், தொடர்ந்து வாடகை தராததால் டவரை அகற்றுமாறு வீட்டு உரிமையாளர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஏர்செல் நிறுவனம் டவர் உரிமத்தை உள்ளூர் நிறுவனத்திடம் வழங்கியதாகவும், அந்நிறுவனம் டவரின் முதற்கட்ட பாகங்களை கழற்றி அப்புறப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. மீதமுள்ள பாகங்களை நோட்டமிட்ட கும்பல் செல்போன் டவர் நிறுவன ஊழியர்கள் போல் நடித்து கொள்ளை அடித்துச்சென்றதாக கூறப்படுகிறது. கொள்ளையடிக்கப்பட்ட செல்போன் டவர் 8 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பிலானது என நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதால் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பலைத் தேடி வருவதாக போலீசார் கூறினர். கடந்த 4 மாதங்களுக்கு முன் இதேபோன்று பயன்பாட்டில் இல்லாத டவர் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், தற்போது அதே பகுதியில் மீண்டும் ஒரு டவர் கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Delhi: காரில் மீண்டும் தரதர சம்பவம் - மகளிர் ஆணையத் தலைவருக்கே நடந்த கொடுமை!