இம்பால் : மணிப்பூரில் முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுராசந்பூர் மாவட்டம் நியூ லம்கா பகுதியில் உடற்பயிற்சி கூடத்துடன் சேர்த்து விளையாட்டு அரங்கம் புதிதாக கட்டமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடக்க இருந்தது. மணிப்பூர் முதலமைச்சர் என். பைரன் சிங் இந்த விழாவில் கலந்து கொண்டு உடற் பயிற்சி கூடத்துடன் கூடிய விளையாட்டு அரங்கை திறக்க இருந்தார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அந்த இடமே விழாக் கோலம் பூண்டு இருந்தது. வண்ண வண்ண விளக்குகள், மேடை அலங்காரம், நூற்றுக்கணக்கான நாற்காலிக்ள் போடப்பட்டு அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில், நள்ளிரவில் நிகழ்ச்சி மேடைக்கு வந்த மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதாக கூறப்படுகிறது.
மேடையில் பற்றிய தீ நாலாபுறமும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இந்த விபத்தில் விழா அலங்காரம் முழுவதும் வீணாகின. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் தெரிய வராத நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : CSK Vs RR : சொந்த ஊரில் கெத்து காட்டிய ராஜஸ்தான்! புள்ளி பட்டியலில் சென்னைக்கு சறுக்கல்!
அதேநேரம் சுராசந்பூர் பகுதியில் குடியிருக்கும் பூர்வ குடி மக்களை வெளியேற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பூர்வ குடி மக்கள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் விழா அன்று முதலமைசர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை முழு அடைப்புக்கு பூர்வகுடி மக்கள் கோரியிருந்தனர்.
முதலமைச்சர் கலந்து கொள்ள இருந்த விழா மேடைக்கு தீ வைத்து எரித்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கொண்டு கலவர சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் விதமாக சுராசந்பூர் பகுதியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு உள்ளனர்.
சுராசந்பூர் பகுதியில் வதந்திகள் பரவாமல் இருக்க இணையதள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மக்கள் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து வெளியே செல்ல வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க : Karnataka elections 2023: திமுகவை பாலோ பண்ணும் காங்கிரஸ்! ராகுல் காந்தி பளீச் வாக்குறுதி!