கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள அடிமாலி குறிஞ்சிப்பாறை பகுதியைச்சேர்ந்தவர் ராஜூ. இவரும் இவர் மனைவியும் வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்குச் சென்று இருந்தனர். இந்த நிலையில் வீட்டிற்குள் திடீரென்று 15 அடி நீளமுள்ள ராஜநாகம் புகுந்ததைப் பார்த்த குழந்தைகள் கூச்சலிட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்களை அழைத்துள்ளனர்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அடிமாலி வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அடிமாலி வனச்சரகத்திற்கு உட்பட்ட பாம்பு பிடிக்கும் குழுவினர் கே. புலபேந்திரன், மினி ராய் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜூவின் வீட்டிலிருந்த ராஜநாகத்தை சுமார் ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, லாவகமாகப் பிடித்தனர்.
பின்னர் பிடிபட்ட ராஜா நாகத்தை நேரியமங்கலம் வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர். பிடிபட்ட பாம்பு சுமார் 15 அடி நீளமும் 16 கிலோ எடையும் இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். திடீரென்று வந்த ராஜ நாகத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் கைவிடப்பட்ட அரசு குடியிருப்பு.. அச்சத்தில் குடியிருப்புவாசிகள்