பெங்களூரு: கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா, பன்ட்வால் அருகேயுள்ள பொலாலி என்ற இடத்தில் புகழ்பெற்ற ராஜ ராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வத்தம்மா என்ற 80 வயது பெண்மணி ஒருவர் மிகவும் வறிய நிலையில் யாசகம் பெற்று வாழ்ந்துவருகிறார்.
இவரது குடும்பமும் மிகவும் வறிய நிலையில் உள்ளது. ஐயப்ப சுவாமியின் தீவிர பக்தையான அஸ்வத்தம்மா யாசகம் மூலம் பெறும் பணத்தை தனது சொந்த காரணங்களுக்கு பயன்படுத்துவது கிடையாது. அருகில் உள்ள கோயில்களுக்கு நன்கொடை ஆக அளித்துவிடுவார். இந்த நிலையில் அண்மையில் யாசகம் மூலம் ரூ.1 லட்சம் பணத்தை அஸ்வத்தம்மா சேமித்து வைத்திருந்தார்.
இந்த ரூ.1 லட்சம் ரூபாயை பொலாலி ராஜ ராஜேஸ்வரி அம்மன் திருக்கோவிலுக்கு அஸ்வத்தம்மா ஏப்.23ஆம் (சனிக்கிழமை) தேதி தானமாக கொடுத்தார். அஸ்வத்தமா இதுபோன்று செய்வது இது முதல் முறையல்ல. ஒரு ஆண்டுக்கு முன்னர் கோவில்களில் யாசகம் பெற்ற பணம் ரூ.5 லட்சத்தை உடுப்பியில் உள்ள பல்வேறு கோவில்களில் அன்னதான திட்டத்துக்கு தானமாக வழங்கியுள்ளார்.
மூதாட்டி அஸ்வத்தம்மா கடந்த 25 ஆண்டுகளாக கோவில்களில் அன்னதான திட்டத்துக்கு நன்கொடை அளித்துவருகிறார். இம்முறை ராஜ ராஜேஸ்வரி அம்மன் திருக்கோவிலுக்கு மிகப்பெரிய தொகையாக ரூ.1 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆந்திராவில் களைக்கட்டிய கழுதை ஓட்டப்பந்தயம்!