கரோனா உலகையே ஆட்டிப்படைத்து பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருந்து மீண்டு வர பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதனிடையே, கரோனா காலத்தில் நிகழ்ந்த சமூக தாக்கங்கள் குறித்து பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன.
பெருந்தொற்று காலக்கட்டத்தில் பாலின பாகுபாடு காரணமாக பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்காமல் 85 விழுக்காடு பெண்கள் பாதிக்கப்பட்டதாக லிங்க்ட்இன் சமூகவலைதளத்தின் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்களில் வாய்ப்பு கிடைக்காமல் 69 விழுக்காடு பெண்கள் பல இன்னல்களை சந்தித்ததாக கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெருந்தொற்று காரணமாக தங்களுக்கு எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டதாக 10இல் ஒன்பது பெண்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், தங்களின் பெற்றோர் காலத்தை ஒப்பிடுகையில் தற்போது பாலின சமத்துவம் மேம்பட்டுள்ளதாக 66 விழுக்காட்டினர் குறிப்பிட்டுள்ளனர். ஆசிய பசிபிக் கண்டத்திலேயே இந்தியாவில்தான் பாலின் பாகுபாடு அதிகமுள்ளதாக கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.
பணியிடங்களில் முன்னேற்றம் இல்லாமல் மகிழ்ச்சியற்று இருப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு, தங்களது நிறுவனங்களில் ஆண்களுக்கு ஆதரவான பாலின பாகுபாடு நிலவுகிறது என 5இல் ஒரு பெண் தெரிவித்துள்ளார். ஆண்களை ஒப்பிடுகையில் தங்களுக்கு மிக குறைவான வாய்ப்புகள் கிடைப்பதாக 37 விழுக்காடு பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அந்தக் கருத்தை 25 விழுக்காடு ஆண்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.