வாரணாசி (உத்தரப்பிரதேசம்): படிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என உணர்த்தியுள்ளார், பனாரஸில் வசிக்கும் அமல்தாரி சிங். 84 வயதில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் டி.லிட்(இலக்கிய முனைவர்) பட்டம் பெற்றுள்ளார் மற்றும் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற வயதில் மூத்த நபர் எனவும் பெயர் பெற்றுள்ளார் .
சிங், 'ரிக்வேதத்தின் பல்வேறு பாரம்பரிய சம்ஹிதாக்களின் ஒப்பீட்டு மற்றும் விமர்சன ஆய்வு' என்ற தலைப்பில் டி.லிட்(இலக்கிய முனைவர்) பட்டம் பெற்றுள்ளார்.
ஜூலை 22, 1938இல் உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் பிறந்த சிங், சிறுவயதிலிருந்தே சிறந்த மாணவராக விளங்கியுள்ளார். அவர் 1966இல் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி. பட்டம் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி NCC-யின் வாரண்ட் அலுவலராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1967இல் ஜோத்பூர் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியமர்த்தப்பட்டு 11 ஆண்டுகள் பணியாற்றினார்.
அதன் பிறகு, ரேபரேலியில் உள்ள பிஜி கல்லூரியில் 1999 வரை பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு, அவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் வேத தத்துவத் துறையில் பணிபுரிந்து தனது படிப்பைத் தொடர்ந்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 2021ஆம் ஆண்டு இலக்கிய முனைவர் பட்டத்திற்காகப் பதிவு செய்தார். இந்நிலையில் தற்போது ஜூன் 23, 2022அன்று சிங்கிற்கு இலக்கிய முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து அமல்தாரி சிங் கூறுகையில், "நான் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன். மற்ற மாணவர்களைப் போலவே இருக்கிறேன். படிப்பது உங்களை சோர்வடையச் செய்யாது மற்றும் நன்றாக உணர வைக்கிறது" என்று கூறினார்.
அவரது மகன் விக்ரம் பிரதாப் சிங் கூறுகையில், "எனது தந்தை நீண்ட காலமாக வேதங்கள் மற்றும் சனாதன தர்மத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தார். நாங்கள் அவரிடமிருந்து உத்வேகத்தையும் ஆற்றலையும் பெறுகிறோம். இந்த அறிவு பாரம்பரியத்தை முன்னெடுத்துச்செல்லவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: பெங்களூரு கருவூலத்தில் ஜெயலலிதா சொத்துகள்: ஏலம் விட கோரிக்கை