ஹைதராபாத் : ஹைதராபாத் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (81) என்பவர் பயணங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். பல்வேறு உலக நாடுகளுக்கு சுற்றிய இவர் அங்கிருந்து 900க்கும் மேற்பட்ட பழங்கால மற்றும் அரிய வகை பொருள்களைச் சேகரித்துவந்தார்.
இந்தப் பொருள்களை வீட்டிலேயே வைத்திருந்தார். இவரிடம் வெண்கலம், தாமிரம், பித்தளை, கல், பழமையான விண்டேஜ் தொலைபேசி ஆகியவை உள்ளன. அத்துடன் பனை ஓலைகளில் எழுதப் பயன்படுத்தப்படும் 'கந்தம்' என்ற கருவியும் அவரது சேகரிப்பில் உள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், "பழங்காலத்தில் பித்தளைப் பாத்திரங்களில் சாதம், வெண்கலப் பாத்திரங்களில் பருப்பு, சாம்பார், துவரம் பருப்பு ஆகிய பொருள்களை நம் முன்னோர்கள் சேகரித்து வைப்பார்கள். இது உடலுக்கு நன்மை பயக்கும்.
ஆந்திரவைச் சேர்ந்த நான் சென்னையில் வேலை பார்த்தேன். அப்போது என் பாட்டியைச் சென்னைக்கு அழைத்து வர சென்றபோது அவர் தன்னுடைய பித்தளை பொருள்கள், பாத்திரங்கள் ஆகியவற்றை உடன் கொண்டு வருவேன் என்றார். அங்கு நிறைய பாத்திரங்கள் இருக்கின்றன என்று எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. அப்போது தான் அதன் மதிப்பு குறித்து எனக்கு புரிந்தது.
இன்னும் பழங்கால பொருள்கள் பயன்படுத்தும் மக்களை பாராட்ட வேண்டும். இவை அனைத்தையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல விரும்புகிறேன். பழங்காலப் பொருள்களைத் தயாரிப்பதற்குப் பின்னால் உள்ள கதையை அறிய ஓய்வு நேரத்தில் நிறைய ஆராய்ச்சி செய்கிறேன்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஏலத்தில் பல மில்லியனுக்கு விலைபோன 3 கொம்புகள் கொண்ட டைனோசர் எலும்புக்கூடு!