டெல்லி: கரோனா வைரஸ் இரண்டாவது அலை நாடு முழுக்க கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், கரோனா மூன்றாம் அலை குறித்த எச்சரிக்கைகளை மத்திய அரசு வழங்கிவருகிறது.
இந்நிலையில் நாட்டிலுள்ள 11 மாநிலங்களில் 49 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுக்க 48 ஆயிரத்து 698 பேருக்கு புதிதாக கோவிட் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கரோனா தடுப்பூசிகள்
இதற்கிடையில் நாடு முழுக்க கோவிட் தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜூன் 21ஆம் தேதி 90 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன.
அதன்பின்னர் ஒவ்வொரு நாளும் 50-60 லட்சம் வரை தடுப்பூசிகள் தினந்தோறும் போடப்பட்டுவருகின்றன. டெல்டா பிளஸ் பாதிப்பை பொருத்தமட்டில் மகராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
டெல்டா பிளஸ்
அடுத்தடுத்த இடங்களில் தென்மாநிலங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று (ஜூன் 26) கர்நாடகத்தில் ஆறு பேருக்கு டெல்டா பிளஸ் (Delta Plus) பாதிப்புகள் அறியப்பட்டன. அந்தப் பகுதிகள் பெங்களூரு, மைசூரு, சிவமொக்கா, ஹூப்பள்ளி, மங்களூரு மற்றும் விஜயபுரா ஆகும்.
இந்தப் பகுதிகளில் கோவிட் கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே சுதாகர் தெரிவித்தார். இதற்கிடையில் நாட்டிலேயே முதல் டெல்டா பிளஸ் மரணம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.
முதல் மரணம்
இங்குள்ள ரத்னகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 80 வயதான மூதாட்டி வெள்ளிக்கிழமை (ஜூன் 25) மரணித்தார். இந்நிலையில் வைரஸ் குறித்தும் அதன் வீரியம் குறித்தும் தடுப்பூசியின் நோயெதிர்ப்பு சக்தி குறித்தும் மருத்துவர்கள் ஆய்வு நடத்திவருகின்றனர்.
டெல்டா பிளஸ் சார்ஸ் கோவிட்-2 வகை வைரஸாகும். இந்த வைரஸிற்கு தமிழ்நாட்டில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டா பிளஸ் வைரஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவிவருகிறது.
இதையும் படிங்க: கரோனா 3.0: புதிய 'டெல்டா பிளஸ்' வகை கண்டுபிடிப்பு