வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சஜோய் கிராமத்தைச் சேர்ந்தவர் தீராஜ் ஸ்ரீவாஸ்தவா. இவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 14 அன்று இவரது மூத்த மகனின் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அன்று இரவு கேக் வெட்டி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த கேக்கை அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது.
அப்போது அவர்களது இரண்டாவது மகன் பிரஞ்சால், அந்த கேக்கின் ஒரு பகுதியை சாப்பிடத் தொடங்கி உள்ளார். அப்பொழுது அவர் ஒரு மாதிரியாக இருப்பதை பெற்றோர்கள் கவனித்துள்ளனர். இது குறித்து தங்களது மகனிடம் கேட்டபோது, தனக்கு மூச்சு விட கடினமாக இருப்பதாக கூறி உள்ளார். மேலும், கேக், தனது தொண்டையில் சிக்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பதறிப்போன குடும்பத்தினர், உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்த மருத்துவர்கள் சிறுவனை பரிசோதனை செய்து மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனையை பரிந்துரை செய்துள்ளனர். அந்த பரிந்துரையின் பேரில் வேறு தனியார் மருத்துவமனைக்கு சிறுவன் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்தும் மாற்றப்பட்டு, வேறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. மேலும், இரண்டு நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து உறவினர்கள் கூறுகையில், “சிறுவனை பெற்றோர்கள் மூன்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனாலும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்புதான் மூத்த மகனின் பிறந்த நாளினை கொண்டாடினார்கள். ஆனால், தற்போது இரண்டாவது மகன் இறந்து விட்டான். இந்த சம்பவம் குடும்பத்தை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சோகத்தை தங்களாலும் தாங்க முடியவில்லை” என வருத்தமடைந்தனர்.
இது குறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், சிறுவன் பிரஞ்சால் சாப்பிட்ட கேக்கானது, அவரது மூச்சுக் குழாயில் சிக்கி மூச்சு விடாமல் கஷ்டப்பட்டதாகவும், இதனால் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறினார். பின்னர் அங்கிருந்து சிறுவனை இரு வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுவன் மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் உயிரிழந்தார் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓரினச்சேர்க்கையாளர் என்பதை மறைத்த கணவர்: மனைவி போலீசில் புகார்!