புவனேஸ்வர்: கரன்ட் கம்பியைத் தொட்டால் தான் ஷாக் அடிக்கும். ஆனால், புபனேஸ்வரில் உள்ள ஒருவருக்கு, மாதாந்திர கரன்ட் பில்லை பார்க்கும்போதே ஷாக் அடித்து உள்ளது.
ஒடிசா மாநிலம், புபனேஸ்வரை அடுத்த நிலாத்ரி விஹார் பகுதியைச் சேர்ந்தவர், துர்கா பிரசாத் பட்நாயக். இவர் இப்பகுதியில், வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நடுத்தர வசதி கொண்ட இவரது வீட்டின் மாதாந்திர மின் கட்டணம் ரூ. 700 லிருந்து, 1,500 ரூபாய் என்ற அளவிலேயே இருந்து வந்து உள்ளது.
இந்நிலையில், ஒடிசா மாநில மின்சாரத் துறை நிர்வாகம் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் மீட்டர், துர்கா பிரசாத் பட்நாயக் வீட்டிலும் பொருத்தப்பட்டது. துர்கா பிரசாத், மின் கட்டணத்தை, ஆன்லைன் வாயிலாகவே செலுத்தி வந்து உள்ளார். அதன்படி, மே மாத மின் கட்டணத்தை செலுத்தும் பொருட்டு, ஆன்லைனில் பார்த்தபோது, அவருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. அப்படி என்ன அதிர்ச்சி என்று கேட்கிறீர்களா?
அவருக்கு மே மாதாந்திர மின் கட்டணமாக, 7 கோடியே 90 லட்சத்து 35 ஆயிரத்து 456 ரூபாய் பில் வந்து இருந்ததே, இந்த அதிர்ச்சிக்கு காரணம் ஆகும். இதுகுறித்து அவர் கூறியதாவது, “ நான் மாதாந்திர மின் கட்டணமாக ரூ. 700 முதல் 1,500 வரை மட்டுமே செலுத்தி வந்து உள்ளேன்.
எங்கள் வீட்டில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின்பு, மின் கட்டணம், தாறுமாறாக அதிகரித்து வருகிறது. ஏப்ரல் மாத மின் கட்டணமாக, 6000 ரூபாய் கட்டி உள்ளேன். இந்நிலையில், மே மாத மின்கட்டணமாக, 7 கோடியே 90 லட்சத்து 35 ஆயிரத்து 456 ரூபாய் பில் வந்து உள்ளது. ஏதாவது தொழில்நுட்பப் பிரச்னையாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு, இதுதொடர்பான புகாரை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, ஆன்லைன் மூலம் தெரிவித்தேன். ஆனால், எனக்கு இதுவரை எவ்விதப் பதிலும் அவர்களிடமிருந்து வரவில்லை” என்றார்.
ஸ்மார்ட் மீட்டர் குறித்து துர்கா பிரசாத் மேலும் கூறியதாவது, “ ஸ்மார்ட் மீட்டர் எனும் புதிய தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மின்துறையும், மின்வாரியமும் மக்களுக்கு, அதுதொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டும். இதன்மூலம், இதுபோன்ற முறைகேடுகளில் இருந்து, மக்கள் ஏமாறுவதைத் தடுக்க முடியும். ஸ்மார்ட் மீட்டரை விநியோகிக்கும் நிறுவனமும் இதைக் கருத்தில் கொண்டு முறையான மற்றும் வெளிப்படையான சேவையை வழங்க வேண்டும்” என்று அவர் தெரிவித்து உள்ளார்.