டெல்லி: கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நாள்தோறும் 7.5ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதாக மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். மேலும், மாநிலங்களின் மருத்துவப் பயன்பாட்டிற்கு 6ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்படவுள்ளதாகவும், அந்த அளவை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு சில நிறுவனங்கள் நீங்கலாக தொழிற்நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் வழங்குவதை கட்டுப்படுத்த உத்தரவிட்டுள்ளதைக் குறிப்பிட்ட அவர், அதன்மூலம், மருத்துவப்பயன்பாட்டிற்காக ஆக்சிஜனை அதிகப்படியாக வழங்கமுடியும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "24மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் மாநில அரசுகளால் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாநிலங்களில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை களையமுடியும். இதுபோன்ற பெருந்தொற்றை எதிர்கொள்ளும்போது, அச்சமும், குழப்பமும் ஏற்படுகிறது. அதனை நீக்கி சிறப்பாக செயல்பட்டு பிரச்னைகளை கண்டறிய மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும்" என்றார்.
ஆக்சிஜன் இறக்குமதிக்கு டெண்டர்
கரோனா இரண்டாவது அலையில் அதிகப்படியானோர் கரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சில மாநிலங்களில் திடீரென ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், எட்டு மாநிலங்களில் ஆக்சிஜனின் அளவை அதிகப்படுத்தியுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜனை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு விநியோகர்களின் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க 50ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு இறக்குமதி செய்ய முடிவு செய்து அதற்கான டெண்டரை உருவாக்கியுள்ளதாகவும், அதற்கான ஏலம் செவ்வாய் கிழமை நடைபெற்றதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார அமைச்சகம், டெண்டரை இறுதி செய்ய உத்தரவிட்டுள்ளதோடு, சாத்தியமான வட்டாரங்களில் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை கண்டறியும்படி வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கும் வகையில் 9 குறிப்பிட்ட தொழில்களைத் தவிர மற்ற தொழில்நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் வழங்க மத்திய அரசு கடந்த ஞாயிறு அன்று தடை விதித்து. இந்த உத்தரவு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உற்பத்தியை அதிகரிக்க வங்கிகளிடம் கடன் வாங்கிய சீரம் நிறுவனம்