மதுரா (உத்தரப் பிரதேசம்): 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை உலுக்கும் இரண்டு சம்பவங்கள் நடைபெற்றன. ஒன்று 1805இல் நடந்த ஆங்கிலேய- மராத்தியர்கள் போர். இந்தப் போரில் ஆங்கிலேயர்கள் 3200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
எட்டாயிரம் முதல் 10 ஆயிரம் வீரர்கள் வரை காயமுற்றனர். எனினும் பரத்பூர் கோட்டையை ஆங்கிலேயர்களால் நெருங்க முடியவில்லை. கடைசியாக வேறு வழியின்றி ஆங்கிலேயர்கள் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
நாம் பார்க்கப்போகும் இரண்டாவது சம்பவம் உருக்கமானது. இது உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்ட தலைநகரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடீங் என்ற பகுதியில் நடந்தது. இந்தப் பகுதியில் ராஜபுத்திரர்கள் செல்வச்செழிப்புடன் திகழ்ந்தனர். இவர்களை வெற்றிகொண்டு எப்படியாவது அவர்களின் கோட்டையைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பது ஆங்கிலேயர்களின் எண்ணமாக இருந்தது.
80 ராஜபுத்திர வீரர்களுக்குத் தூக்கு
எனினும் அது சாத்தியப்படவில்லை. 1857 புரட்சியின்போது ஆங்கிலேயப் படைகள் ராஜபுத்திரர்களிடம் தோல்வியைக் கண்டன. இறுதியாகப் பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பின்னர் சமாதானம் என்னும் வெள்ளைக்கொடியை ஆங்கிலேயர்கள் தூக்கிப் பிடித்தனர். இதை நம்பிய ராஜபுத்திர வீரர்கள் 80 பேரை சிறைப்பிடித்து அவர்களைத் தூக்கிலிட்டனர். இந்தச் சம்பவம் வரலாற்றின் பக்கங்களிலும் பதிவாகியுள்ளது.
இதை வரலாற்று ஆய்வாளர் சத்ருகன் சர்மாவும் உறுதிப்படுத்துகிறார். அவர் கூறுகையில், “ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பலகட்ட போராட்டங்களை ராஜபுத்திர வீரர்கள் முள்னெடுத்தனர். அதன் நீட்சியாக ஆங்கிலேயர்களால் ராஜபுத்திர சமஸ்தானத்தைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியைக் கையாண்டனர். ஆங்கிலேயர்களின் இந்தச் சூழ்ச்சி குறித்து ராஜபுத்திரர்கள் ஏதும் அறியார்கள்.
சிதிலமடைந்த கோட்டை
ஆகையால் அவர்களிடம் வலியபோய் சிக்குண்டுவிட்டார்கள். நாட்டின் விடுதலைக்காகப் போராடிய அவர்கள் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டு, தூக்கிலிடப்பட்டனர். இதற்கான வரலாற்று ஆவணங்கள் இன்றளவும் உள்ளன. இந்தக் கோட்டை 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது சிதிலமடைந்து உள்ளது” என்றார்.
மதுராவில் உள்ள ராஜபுத்திரர்களின் கோட்டையான பூரணி ஹவேலி (Purani Haveli) ஃபோண்டமால் ஜாட் (Fondamal Jatt) என்பவரால் கட்டப்பட்டது. ஆதலால் இக்கோட்டை ஃபோண்டராம் கி ஹவேலி ( Fondaram ki Haveli) என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது இந்தக் கோட்டையின் கட்டடங்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன.
ஃபோண்டமால் ஜாட்
இது பற்றி உள்ளூர்வாசி கன்னா சைனி, “கடந்த காலத்தில் ராஜாக்கள் வாழ்ந்த கோட்டை இது. இன்றைக்கு இது சிதிலமடைந்து காணப்படுகிறது. நாங்க இத எங்க ஊரோட அதிசயமா, அடையாளமாகத்தான் பார்க்கிறோம். ராஜபுத்திரர்களின் தியாகத்தில் விளைந்த கோட்டை இது. ஆங்கிலேயர்களை எதிர்த்த 80 ராஜபுத்திரர்கள் இங்கு தூக்கிலிடப்பட்டனர்.
அவர்களின் குடும்பங்கள் இன்றளவும் இந்தப் பகுதியைச் சுற்றி வாழ்ந்துவருகின்றனர். ராஜபுத்திர வீரர்களை ஆங்கிலேயர்கள் கொள்ளையர்கள் என்று முத்திரை குத்தி தண்டித்தனர்” என்றார்.
பரத்பூரின் ராஜா சூரஜ்மாலின் அடிமையாக இருந்தவர்தான் ஃபோண்டமால் ஜாட் (Fondamal Jatt). அடீங் நகரம் சூரஜ்மால் காலத்தில் நகரின் மையப்புள்ளியாகச் செயல்பட்டது. இந்த அதிகாரத்தை ஆங்கிலேயர்கள் கி.பி. 1868இல் ரத்துசெய்தனர். இதனை மீட்டெடுக்க மக்கள் தொடர் கோரிக்கைகள் முன்வைத்தும் பலனில்லை. அலுவலர்கள் மாறிக்கொண்டே இருந்தனரே தவிர மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
ராஜபுத்திர வாரிசுவின் கோரிக்கை
இதற்கிடையில் தற்போது மன்னர்களின் ஆறாவது தலைமுறையைச் சேர்ந்த பாதம் சிங் ராஜபுத்திரர், “நான் மதுரா ராஜபுத்திரர்களின் ஆறாவது தலைமுறையைச் சேர்ந்தவன். எங்கள் முன்னோர்கள் இங்கு மன்னர்களாக வாழ்ந்துள்ளனர். அந்தக் காலத்தில் கோட்டை செல்வ வளமிக்க பகுதியாகத் திகழ்ந்துள்ளது. இங்குள்ள செல்வத்தை கொள்ளையடிக்க ஆங்கிலேயர்கள் பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டினர்.
அந்த சதித் திட்டங்கள் மூலம் ராஜபுத்திர சமஸ்தானம் வீழ்த்தப்பட்டது. 80 பேர் தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் குடும்பங்கள் அநாதையாக்கப்பட்டன. எங்களது கோரிக்கை, கோட்டை மீண்டும் புனரமைக்கப்பட வேண்டும். இதை அரசு எங்களுக்குச் செய்து தர வேண்டும்” என்று கோரிக்கைவிடுத்தார்.
ஆங்கிலேயர்கள் தந்திரமாக 80 ராஜபுத்திரர்களைக் கைதுசெய்து தூக்கிலிட்ட போதும் அங்கு ராஜபுத்திரர்களின் வம்சத்தை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. ராஜபுத்திர வீரர்கள் தூக்கிலிடப்பட்டபோது கர்ப்பிணியாக இருந்த ஹர்தேவி அங்கிருந்து தப்பித்துச் சென்றார். நாட்டின் விடுதலையில் ராஜபுத்திரர்களின் பங்கு அளப்பரியது. அவர்களின் தியாகங்கள் பதிவுசெய்யப்பட்ட இடங்களில் இதுவும் ஒன்று.
இதையும் படிங்க : இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மையப்புள்ளி சபர்மதி ஆசிரமம்!