ஹைதராபாத் : மூடுபனி போர்வை போர்த்திய வானம், பசுமையான மலைகள், தென்றல் வீசும் காற்று, வெண்மேகத்தை ஆடையாக உடுத்திய வனம் என நாம் பயணிக்கும் இந்தத் தார்ச் சாலை நாட்டின் விடுதலைக்கு உயிர்வூட்டிய இடம் ஒன்றை இணைக்கிறது.
தீரா வேட்கை, தீவிரத் தேடலுக்கு பின் ஒருவழியாக நாம் டார்ஜிலிங் மலைப் பகுதியை அடைந்துவிட்டோம். அங்கிருந்து கிடாபஹார் பகுதியை அடைந்துவிட்டோம். இது தான் கிடாபஹர். நாம் தேடிவந்த வீடும் இங்குதான் உள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
இது ஒரு புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரரின் விடாமுயற்சிக்கு அசைக்க முடியாத சாட்சியாக திகழ்கிறது. தாய் நாட்டின் விடுதலைக்காக உச்சப் பட்ச தியாகம் அளித்த அந்த மாமனிதர் இங்கிருந்துதான் தன் உற்ற நண்பர்களுக்கு கடிதம் எழுதினார். இந்த மலை உச்சிகள் நேதாஜியை நன்கு அறியும். ஆம். அவர்தான்.. சுபாஷ் சந்திர போஸ்.
நேதாஜி இன்றி இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாறு முழுமையடையாது. ஏனெனில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் காலனித்துவ ஆட்சியை ஒற்றைக் கையால் அசைத்தார் இவர். இவரை ஆங்கிலேயர்கள் தங்கள் கண்காணிப்பிலே வைத்திருந்தனர். 1936ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 6 மாதங்கள் கிடாபஹாரில் உள்ள இந்த வீட்டில்தான் நேதாஜி சிறை வைக்கப்பட்டார்.
வீட்டுச் சிறை
1922 ஆம் ஆண்டு கிடாபஹாரில் உள்ள இந்தப் பங்களாவை சுபாஸ் போஸின் மூத்த சகோதரர் சரத் சந்திர போஸ் வாங்கினார். போஸ் குடும்பத்தினர் விடுமுறை நாள்களில் இந்த பங்களாவிற்கு அடிக்கடி வருவார்கள். சுபாஸ் சந்திர போஸூம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வருவார்.
ஆனால், 1935க்குப் பிறகு நேதாஜி அதே வீட்டில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டபோது எல்லாம் மாறியது. இங்கிருந்து அவரது தனிப்பட்ட உதவியாளர் பட்லர் கலு சிங் லாமா மூலம் அவருடைய குறிப்புகள் மற்றும் செய்திகளைக் கடத்தினார். இந்தத் தகவல்கள் முதலில் ரொட்டித் துண்டு மூலமாகவும் பின்னர் காலணிகள் வாயிலாகவும் கடத்தப்பட்டன.
நினைவுச் சின்னம்
சுபாஷ் சந்திர போஸ் இங்கு வீட்டுக் காவலில் இருந்தபோதுதான் ரவீந்திரநாத் தாகூருக்கு பங்கிம் சந்திர சட்டோபாத்யாயின் வந்தே மாதரத்தில் சில வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதினார். மாநில அரசு 1996 இல் கையகப்படுத்திய பிறகு நேதாஜி இன்ஸ்டிடியூட் ஃபார் ஏசியன் ஸ்டடீஸ் இந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்றியது.
நேதாஜி தனது வீட்டுக் காவலில் இருந்தபோது 26 கடிதங்கள் மற்றும் குறிப்புகள் இந்த கிட்டபஹார் பங்களாவிலிருந்து கடத்தப்பட்டதாக பதிவுகள் கூறுகின்றன. அவர் பல எழுத்துப்பூர்வ தகவல்களையும் பெற்றிருக்கிறார். வங்காளத்தின் மலைகளுக்கு மத்தியில் நேதாஜியின் நினைவுகளுடன் நிமிர்ந்து நிற்கிறது கிடாபஹர் பங்களா.
இதையும் படிங்க : அண்ணல் காந்தி நிறுவிய நவ்ஜீவன் அறக்கட்டளை!