பெங்களூரு: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கபினி, கேஆர்எஸ் உள்ளிட்ட அணைகள் நிரம்பியதால், உபரிநீர் முழுவதுமாக திறக்கப்படுகிறது. இதனால் கிருஷ்ணா, காவிரி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் அசோகா, "கர்நாடகாவில் 14 மாவட்டங்களில் 161 கிராமங்கள் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை, வெள்ளம், நிலச்சரிவு, இடி மின்னல் உள்ளிட்டவற்றால் 73 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7 ஆயிரத்து 386 பேர், 75 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்து 197 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 666 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. 17 ஆயிரத்து 750 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. 1 லட்சத்து 29 ஆயிரத்து 87 ஹெக்டேர் விளைநிலங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளுக்காக 857 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கனமழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு 5 லட்சம் ரூபாயும், மோசமாக சேதமடைந்த வீடுகளுக்கு 3 லட்சம் ரூபாயும், பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும்" என்று கூறினார்.