இந்தியாவில் கரோனாவின் தாக்கம் தற்போது குறைந்துவரும் நிலையில், பிரிட்டனிலிருந்து மரபியல் மாற்றம் அடைந்த உருமாறிய கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த வைரஸ் பழைய கரோனா வைரசை விட 70 விழுக்காடு வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அந்நாட்டுடனான விமான போக்குவரத்திற்கு ஜனவரி 7ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் இந்த மாதம் 23 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தில் இருந்து பிகார் மாநிலம் பாட்னவிற்கு வந்த 96 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 25 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டது. மேலும் உள்ள 71 பேரை தேடிவருகின்றனர்.
இதுகுறித்து பாட்னா அரசு மருத்துவமனை மூத்த மருத்துவர் விபா குமாரி சிங் கூறுகையில், "நவம்பர் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரை இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வந்த 96 பேரின் முகவரி தொலைபேசி எண்கள் எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சிலரின் தொலைபேசி எண்கள் தெளிவாக இல்லை. சிலரை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால், அவர்கள் தொலைபேசியில் எடுக்கவில்லை.
பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு திரும்பியவர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களைப் பார்க்க அலுவலர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து வேறு இடத்திற்குச் சென்று இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர்களை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்" என்றார்.