பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் திப்பா(Tibba) சாலை அருகே உள்ள மக்கர் காலனியில் குடிசை ஒன்று தீப்பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில், 5 குழந்தைகள் உள்பட குடிசையில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், விபத்து நிகழ்ந்த குடிசை பிகாரிலிருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களுடையது என்றும், தீப்பற்றியபோது அனைவரும் தூங்கிக்கொண்டிருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தெரியவந்தது.
இந்த குடும்பத்தைச் சேர்ந்த மூத்த மகனான ராஜேஷ் வல்வால் என்பவர், தனது நண்பர் வீட்டுக்கு உறங்கச் சென்றுவிட்டதால் அவர் மட்டும் உயிர் பிழைத்தார் என போலீசார் தெரிவித்தனர். குடிசைக்கு அருகே உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கு, கடந்த சில நாட்களாக எரிந்து வருவதாகவும், அதிலிருந்து தீப்பொறி பட்டு குடிசை தீப்பிடித்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.