கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் இல்லாத அவல நிலையை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் இன்று அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் போன்றவை இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தன. நேற்று (ஜூலை 8) முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர் அமைப்பினர் தலைநகர் கொழும்புவை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றனர்.
இன்று காலையிலும் ஏராளமான வாகனங்களில் மக்கள் கொழும்பு நகருக்குள் வருவதைக் காண முடிந்தது. அதிபர் கோட்டாபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். கோத்தபய ராஜபக்சேவை பதவி விலகக்கோரி முழக்கமிட்டதுடன் அதிபர் மாளிகை முன்பு வைக்கப்பட்டிருந்த காவல்துறையின் பேரிகேட்டுகளையும் தகர்த்து எறிந்தனர்.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல்துறையினர் அவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இதில் ஏராளமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட இரு காவலர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினரும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இதனால் இலங்கையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: இலங்கை செல்ல விசாவுக்கு விண்ணப்பித்த பெண்ணிடம் கடுமையாக நடந்துகொண்ட குடியுரிமை அதிகாரிகள்..