உத்தர பிரதேசம் : அயோத்தியில் வரும் 22ஆம் தேதி ராமர் கோயில் பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் குழந்தை ராமரின் சிலையை பிரதமர் மோடி சுமந்து செல்கிறார். பின்னர் ராமர் சிலை கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலமே விழாக் கோலம் பூண்டு உள்ளது.
மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்து அயோத்திக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வர உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. கோயிலுக்கான மணி, பூஜை பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை பக்தர்கள், பொது மக்கள் தொடர்ந்து காணிக்கையாக வழங்கி வருகின்றனர். ராமர் கோயில் திறப்பு விழாவில் பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பல்துறை ஜாம்பவான்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் ராமர் கோயில் திருவிழா தனிக் கவனம் பெற்று உள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ், இல்லினாய்ஸ் உள்ளிட்ட 10 மாகாணங்களில் ராமர் கோயில் திறப்பு விழாவை குறிக்கும் வகையில் 40க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட பில்போர்டுகள், விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை நடைபெறுவதை முன்னிட்டு, இதற்கான சடங்கு பூஜைகள் இன்று (ஜன. 16) முதல் ஆரம்பமாகி உள்ளன. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமா் சிலை வரும் 22ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில். பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு சடங்கு பூஜைகள் இன்று முதல் தொடங்கியுள்ளதாக கோயில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார். ஜனவரி 17ஆம் தேதி ராமர் சிலையின் பரிசார் பிரவேசம் விழா நடைபெறுகிறது. தொடர்ந்து ஜனவரி 18ஆம் தெதி ஜல யாத்திரை, தீர்த்த பூஜை, கந்தாதிவாஸ் சடங்குகளும், ஜனவரி 19ஆம் தேதி கேசராதிவாஸ், கிருதாதிவாஸ் ஔஷததிவாஸ் போன்ற சடங்குகளும் நடைபெறுகின்றன.
தொடர்ந்து அன்று மாலை, தான்யாதிவாஸ் சடங்கு நடைபெறுகிறது. ஜனவரி 20ஆம் தேதி காலை ஷர்கராதிவாஸம், பலாத்வாஸ் சடங்குகளும், மாலையில் புஷ்ப தீபம் நடக்க உள்ளன. ஜனவரி 21ஆம் தேதி காலை மத்யாதிவாஸ் மற்றும் மாலை ஷியாதிஸமும் சடங்குகளும் நடைபெற உள்ளன. ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
இதையும் படிங்க : ஆந்திர காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஒய்எஸ் ஷர்மிளா நியமனம்! சூடிபிடிக்கும் அரசியல் களம்!