வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு மிக அருகே அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இந்த மசூதியின் வளாகத்தில் சிரிங்கர் கவுரி சன்னதி அமைந்துள்ளது. இங்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பக்தர்கள் சென்று வழிபட அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கவுரி சன்னதிக்கு தினமும் சென்று வழிபாடு நடத்த சட்ட அனுமதி கோரி, 5 பெண்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். கோயில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் தான் மசூதி கட்டப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதுதொடர்பாக கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்த சீனியர் டிவிஷன் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2022ம் ஆண்டு மே மாதம் அந்த ஆய்வு முடிவுக்கு வந்தது. அப்போது மசூதி வளாகத்தில் சிவலிங்கம் போன்ற பொருள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த மசூதி நிர்வாகம், அது சிவலிங்கம் இல்லை என்றும், செயற்கை நீரூற்று எனவும் விளக்கம் அளித்தது.
பின்னர் இந்த விவகாரம் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு சென்றது. அப்போது இந்துக்கள் தரப்பில், மசூதி வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி தொல்லியல் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும், மசூதி நிலம் எங்களுக்கு உரியது என்ற வாதத்தை முன்வைத்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து, இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதுதொடர்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கார்பன் டேட்டிங் முறைப்படி தொல்லியல் ஆய்வு நடத்த இடைக்கால தடை விதித்தது. மேலும் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதற்கிடையே, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் 4 மனுதாரர்கள் ஒன்றாக சேர்ந்து கடந்த ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். ஞானவாபி மசூதி விவகாரத்தில் வெவ்வேறு நீதிமன்றத்தில் 7 வழக்குகள் உள்ளதாகவும், அவற்றை ஒருங்கிணைத்து ஒரே நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இந்த மனு மீதான வாதங்கள் கடந்த திங்கள்கிழமை நிறைவடைந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் மே 23 அன்று தீர்ப்பளித்த வாரணாசி மாவட்ட நீதிபதி விஷ்வேஸ் "ஞானவாபி மசூதி தொடர்பான 7 வழக்குகளும் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். இந்த வழக்கில் மாவட்ட நீதிபதிக்கு இருக்கும் தனி அதிகாரத்தை (CPC 4A) பயன்படுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. வெவ்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், முரண்பட்ட தீர்ப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. அதை தவிர்க்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது" என கூறினார்.
அப்போது குறுக்கிட்ட இஸ்லாமிய அமைப்புகள் தரப்பு வழக்கறிஞர், முகமது தோஹித் கான், "ஞானவாபி மசூதி தொடர்பான வழக்குகள் இன்னும் கூட்டு விசாரணையை எட்டவில்லை. ஒவ்வொரு வழக்கிலும் உள்ள ஆதாரங்களை நீதிமன்றம் தனித்தனியாக ஆய்வு செய்ய வேண்டும்" என வாதாடினார். எனினும் இந்த வாதத்தை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.