பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூருவிலுள்ள ஹெப்பாலா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயம்மா (65) - சிக்கண்ணா (65). இருவரும் இளம் வயதிலிருந்தே காதலித்துவந்தனர்.ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஜெயம்மா வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு குழந்தை இல்லை.
இதனால், அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.இது ஒருபுறமிருக்க, மற்றொரு புறம் தனது காதலியை நினைத்துக்கொண்டே சிக்கண்ணா வாழ்ந்துவந்துள்ளார். இந்நிலையில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது காதல் ஒன்றுசேரும் வகையில் அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.
மாண்டியா மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற செல்வராயனசுவாமி கோயில் எதிரே உள்ள ஸ்ரீனிவாஸ் குருஜியின் ஆசிரமத்தில், இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த இணையரின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி, பொதுமக்களிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்றுவருகிறது.
காதலுக்கு கண் இல்லை. நிறம் இல்லை, பணம் இல்லை எனக் கூறுவதைக் கேள்விப்பட்டிருப்போம். ஏன் காதலுக்கு வயதில்லை எனக்கூட கூறிக்கொண்டு இரண்டு அல்லது மூன்று வயது மூத்தவர்களை காதலிப்பதையும் கண்டிருப்போம்.
ஆனால், இங்கு காதலுக்கு வயதில்லை என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இந்தக் காதல் இணையர் 35 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது 65 வயதில் ஒன்றுசேர்ந்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.