ஸ்ரீநகர்: காஷ்மீரில் இந்தாண்டில் பயங்கரவாதிகளுக்கும் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் இதுவரை 62 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை உயர்அலுவலர் இன்று (ஏப்.28) தகவல் தெரிவித்துள்ளார்.
இன்று காலை காஷ்மீர் மண்டல காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார் வெளியிட்ட அறிக்கையில், "சுட்டுக்கொல்லப்பட்ட 62 பயங்கரவாதிகளில் 39 பேர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள். 15 பேர் ஜெய்ஷ்ஸ்-இ-முகம்மது, 6 பேர் ஹிஸ்புதீன் முஜாகிதீன், 2 பேர் அல்-பத்ர் அமைப்பை சேர்ந்தவர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த 62 பேரில், 47 பேர் உள்ளூர் பயங்கரவாதிகள் என்றும், 15 பேர் வெளிநாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள மித்ரிகாம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இருவர் ஐஜாஸ் ஹபீஸ், ஷாஹித் அயூப் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் அல்-பத்ர் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகள் புல்வாமாவில் சுட்டுக்கொலை!