ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (நவ.19) மாலை ராஜஸ்தானில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்காகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட நாகூரில் உள்ள கீன்வ்சார் காவல் நிலையம் மற்றும் மகிளா காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்களும் கார் ஒன்றில் ஜுன்ஜுனு பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சுரு மாவட்டத்தின் சுஜான்கர் சாதர் பகுதி அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக போலீசார் வந்த கார், லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த பயங்கரமான விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த போலீசாரை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவனைக்குச் செல்லும் வழியிலேயே ராம்சந்திரா, கும்பராம், சுரேஷ் குமார், தனராம், மகேந்திர குமார் உள்ளிட்ட 6 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிவரும் சுக்காராம் என்ற காவலருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் உயிரிழந்த காவலர்களுக்கு அம்மாநில காவல்துறை இயக்குநர் உமேஷ் மிஸ்ரா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் காவல்துறையினரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து தனது 'X' பக்கத்தில் இரங்கல் செய்தி ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், "சுருவின் சுஜாங்கர் சதார் பகுதியில் வாகன விபத்தில் காவலர்கள் பலியானது குறித்த சோகமான செய்தி கிடைத்தது. இந்த விபத்தில் உயிரிழந்த அனைத்து காவலர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், காயமடைந்த போலீசார் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புப் பணிக்காகச் சென்று கொண்டிருந்த போலீசார், விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து! இந்திய வீரர்களுக்கு ஆறுதல்!