ஜகார்த்தா (இந்தோனேசியா): இந்தோனேசியாவின் திமோர் தீவில் இன்று 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் பீதியில் உள்ளனர்.
270 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ள இந்தோனேசியா அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக்கூடிய ஒரு நாடாக உள்ளது. எரிமலைகளின் வளைவில் இப்பகுதி அமைந்துள்ளதால் அடிக்கடி பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் இப்பகுதி தாக்கப்படுகிறது.
கடந்த வருடம் மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் 5.6 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 602 பேர் உயிரிழந்தனர். 2018ஆம் ஆண்டு சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 4 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதற்கு முன்பு 2004ஆம் ஆண்டில், இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உருவான சுனாமியால் 12 நாடுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இந்த பாதிப்பில் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இஸ்ரேல் - ஹமாஸ் போர்: இரண்டரை லட்சம் இஸ்ரேலியர்கள் இடம் பெயர்ந்ததாக தகவல்!
இந்நிலையில் இந்தோனேசியாவின் திமோர் தீவில் இன்று (நவ. 2) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 36.1 கிலோ மீட்டர் (22.4 மைல்) ஆழத்தில் இருந்ததாகவும், அதன் மையம் கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தின் தலைநகரான குபாங்கிற்கு வடக்கில் இருந்து வடகிழக்கே 21 கிலோ மீட்டர் (13 மைல்) தொலைவில் இருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனத்தின் பூகம்பம் மற்றும் சுனாமி மையத்தின் தலைவர் டாரியோனோ தன் எக்ஸ் தளத்தில், "இந்த நிலநடுக்கம் பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் வலுவாக உணரப்பட்டதால் பீதியை ஏற்படுத்துகிறது. இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகளின் மற்றும் கட்டிடங்களில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது" என பதிவிட்டு உள்ளார்.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து ஏதும் இல்லை என கூறபட்டு உள்ளது. பெரிய அளவில் நில நடுக்கம் உணரப்பட்ட போதும், சேத விளவுகள், உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இதையும் படிங்க: தசரா நாயகன் விநாயகம் என்கிற அக்கி ராஜா யானை மாரடைப்பால் உயிரிழப்பு!