காக்கிநாடா(ஆந்திரா): ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இன்று(செப்.6) காலை வழக்கம்போல் பள்ளி தொடங்கிய நிலையில், வகுப்புகள் ஆரம்பித்த சிறிது நேரத்தில் 5, 6, 7ஆம் வகுப்பு மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். அலறியபடியே மாணவ மாணவிகள் மயங்கி விழுந்ததால், அங்கு பரபரப்பு நிலவியது.
சுமார் 50 மாணவர்கள் மயங்கி விழுந்ததாகத் தெரிகிறது. உடனடியாக ஆசிரியர்கள் இதுகுறித்து பெற்றோர்களுக்கு தெரிவித்தனர். பிறகு, மயங்கி விழுந்த குழந்தைகளை காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விஷ வாயுவை சுவாசித்ததால் மாணவர்கள் மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் கூறினர். மாணவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பள்ளியில் நேற்று மாணவர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டதாகவும், அதில் ரசாயனங்கள் நிறைந்த ஸ்பிரேவை அடித்து மாணவர்கள் விளையாடியதாகவும் கூறப்படுகிறது. இந்த ஸ்பிரேவில் இருந்து விஷ வாயு பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: Video - லிஃப்டில் வந்த சிறுவனை கடித்த வளர்ப்பு நாய்